மனித அழுக்குகளை வெளுத்து வாங்கிய படம்.. 'டோரதி' பார்த்து பிரமித்து போனேன்.. சேரன்!
சென்னை: தனது தனித்துவமான படைப்புகளின் மூலம் முத்திரை பதித்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது மிக முக்கியமான, துணிச்சலான கதைக்களத்துடன் களமிறங்கியுள்ள படம் தான் டோரதி. கீர்த்திசுரேஷ், ரிஷி காந்த், சனந்த்,ஜீவா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை பார்த்த இயக்குநர் சேரன் வெகுவாக பாராட்டி உள்ளார்.
டோரதி: 90-களின் மத்தியில் சாதி வெறி, வகுப்புவாதம், ஆணாதிக்க திமிர் மற்றும் வன்முறை என அனைத்தும் ஒருங்கே அமைந்த ஒரு கிராமத்தில் சுப்பு (சனந்த்) கார்த்தி (ரிஷிகாந்த்) இருவரும் நண்பர்களாக இருக்கின்றனர். சுப்புவின் குடும்பத்தில் தந்தை மற்றும் மூத்த சகோதர்கள் என அனைவரும் தாடியையும் மீசையையும் ஆண்மையின் உயரிய அடையாளத்துடன் இருக்கின்றனர். மறுபுறம், தந்தையை இழந்த தாயால் வளர்க்கப்படும் சாதுவாக கார்த்திக் இருக்கிறார். சுப்புவின் தைரியத்தையும் அவரது குடும்பத்தின் முரட்டுத்தனத்தையும் பார்த்து கார்த்திக் வியக்கிறான்.
கதை: ஆனால், இவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும் போது இருவரின் குணநலன்களும் தலைகீழாக மாறுகின்றன. சுப்புவின் அண்ணனுக்குத் திருமணம் நடந்து கேரளாவில் இருந்து டோரதி (கீர்த்தி சுரேஷ்) என்ற பெண் மருமகளாக வீட்டுக்கு வருகிறார். தாயன்புக்காக ஏங்கும் சுப்புவுக்கு, டோரதியின் வரவு ஆறுதலாக அமைகிறது. இது கார்த்திக்கும் சுப்புவின் தந்தைக்கும் பிடிக்கவில்லை. இதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் இருவரது நட்பையும் எங்கே கொண்டு செல்கிறது என்பதே 'டோரதி படத்தின் கதை.
இயக்குநர் சேரன்: இந்த படத்தை பாராட்டிய இயக்குநரும் நடிகருமான சேரன் தனது எக்ஸ் தளத்தில், இதை பார்க்கும் முன்னால நீங்க நிறைய இந்த சமூகத்தை, மனிதர்களை படிக்கனும். அப்போத்தான் புரியும்.. எதுனால முதல் பகுதில அவ்வளவு வன்மம் , ரத்தம், பழிக்குப்பழி, சாதிச்சண்டை, மொழிபேதம்னு.... மனித அழுக்குகளால் ஆன முதல்பாதியில் இருந்து ஏன் இரண்டாவது பகுதி முழுக்க வேற படமா இருக்கு.. இயற்கையும் தீராத காதலும் சுமந்து வீசும் தென்றலாக அவ்வளவு மென்மை, பாலினம் தாண்டிய அன்பு, பயணம், வெறுப்பையும் நேசிக்கும் பக்குவம், நீ எதுவாக வேண்டுமானலும் இரு .. நான் அன்பு காட்டுவேன் என்ற உண்மை... காட்டுக்கூச்சலால் தலைநிமிர்ந்து நிற்பதாக ஆர்ப்பரிக்கும் ஆறாவது அறிவை பயன்படுத்தாத சமூகத்துக்குள் பாலினம் அற்ற ஒரு உயிர் புல்லாங்குழலால் இசைக்கிறது.
பிரமிப்பின் உச்சம்: காற்றுக்கும் துவாரத்துக்கும் நடுவில் இசை உருவாகும் அதிசயமே வாழ்க்கை என... திரைப்படத்தின் உருவாக்கத்தில் கார்த்திக் சுப்புராஜ் பிரமிக்க வைக்கிறார். அவர் திரையில் எழுதிய திரை (புதுக்)கதைதான் எனக்கு இந்த புரிதலை சொல்லித்தந்தது... சினிமாவில் இருக்கும் நிறையபேர் பாராட்டிய பின்னர் நான் சொல்வது சாதாரணமாக கூட இருக்கலாம். ஆனால் நான் இன்னும் நல்ல ரசிகன் என்பதை நான் படம் பார்த்த பின்னர் எனக்குள் ஏற்பட்ட சந்தோசம் சொன்னது. வெல்டன்.. படம் உருவாக்கத்தில் பயணித்த அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள். மேன்மைமிகு இளையராஜா. வெறித்தனமா பின்னனி இசை.. நீண்ட நாட்களுக்கு பின்னர் திரைக்கதையோடு சேர்ந்து எட்டா உயரத்தில் எழுந்து நின்று ஆர்ப்பரித்த இசை... பிரமிப்பின் உச்சம். மனுஷனை எந்த அடையாளமும் இல்லாம நேசிக்க ஆரம்பிக்கும் உலகமே சொர்க்கம். தற்காலிக வெற்றி தோல்விகளை வைத்து மனிதனை அடையாளப்படுத்தும் கலாச்சாரம் கூட அசிங்கம் தான்.. நல்லபடத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும் மக்களுக்கே நான் நன்றி சொல்வேன் என பதிவிட்டுள்ளார்.