மணல் அள்ளுதல்: ரூ.2.88 கோடி லஞ்சம், விவசாயிகள் போராட்டம்
தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் 72 இடங்களில் மணல் அள்ளுவதற்கு அனுமதி அளிக்க வட்டாட்சியரும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ரூ.2.88 கோடி லஞ்சம் பெற்றதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இதையடுத்து, விவசாயிகள் திடீர்ப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் ரேவதி தலைமையில், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். சட்டவிரோதமாக மண் அள்ளுதலுக்கு அதிகாரிகளே உறுதுணையாக இருந்து கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இப்போராட்டத்தின்போது விவசாயிகள் பல்வேறு முக்கியமான கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டிய பிறகே டெல்டா பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க வேண்டும்; செப்டம்பர் 1ஆம் தேதி தண்ணீர் திறக்கக் கூடாது என்றும் வலியுறுத்திய விவசாயிகள், பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட விவசாயிகள், லஞ்சக் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
முற்றுகைப் போராட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் திரளாகக் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
தண்ணீர்ப் பற்றாக்குறையால் சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் கடும் பொருளியல் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.