நன்யாங் பல்கலைக்கழகம் கற்றுத்தந்த பல்லினப் பாடம்
சீனாவுக்கு வெளியே நிறுவப்பட்ட முதல் சீனப் பல்கலைக்கழகம் என்ற பெருமைக்குரியது நன்யாங் பல்கலைக்கழகம். 1955ல் தொடங்கியதிலிருந்து அங்குச் சீன மொழியிலேயே பாடங்கள் கற்பிக்கப்பட்டுவந்த நிலையில், 1975ல் அங்கு முதன்முறையாக ஆங்கில மொழியில் பாடங்கள் கற்பிக்கப்படத் தொடங்கின.
இந்த மாற்றமே பின்னர் நன்யாங் பல்கலைக்கழகத்தைப் பல இன மாணவர்கள் கல்வி கற்கும் வளாகமாக மாற்றிய முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.
அதுவரை, ஆங்கிலத்தில் கற்க விரும்புவோர் சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகத்துக்குச் செல்வதுதான் வழக்கமாக இருந்தது.
“அதனால், நன்யாங் பல்கலைக்கழகத்தில் சேரலாம் எனக் கடிதம் வந்ததும் முதலில் குழப்பமடைந்தேன். சீன மொழியில் பாடங்கள் கற்பிக்கும் பல்கலைக்கழகத்தில் நான் எப்படிப் படிக்கப் போகிறேன் என்ற கேள்விதான் உடனே தோன்றியது,” என்றார் திருவாட்டி ஜான்சிராணி தனபால்.
அவருடைய தந்தைதான் செய்தித்தாளில் பார்த்து, அந்த ஆண்டுமுதல் அங்கு ஆங்கில மொழியில் பாடங்கள் கற்பிக்கப்படவுள்ள செய்தியை அவருடன் பகிர்ந்தார்.
நன்யாங் பல்கலைக்கழகத்துக்கு முதன்முறையாகத் தந்தையுடன் சென்ற அனுபவம் இன்றும் திருவாட்டி ஜான்சிராணியின் மனத்தில் நிற்கிறது.
“சாலை வளைவைத் தாண்டியதும், சீனாவின் கலாசார அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்த கட்டடங்களைக் கண்டு வியந்தேன். சீனாவுக்குள் அடியெடுத்துவைத்ததுபோல் உணர்ந்தேன்,” என்றார் அவர்.
அந்த வளாகம்தான் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அவரது இருப்பிடமாகத் திகழ்ந்தது. அங்கு அவர் வரலாறு, அரசாங்கம், அரசியல் நிர்வாகம் ஆகியவற்றைப் படித்தார். அவர் 1979ல் ‘ஹானர்ஸ்’ பட்டமும் பெற்றார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
ஆங்கிலப் பிரிவில் சேர்ந்த பல்கலைக்கழக முதலாமாண்டு மாணவர்களில் கிட்டத்தட்ட 26 பேர்தான் அதற்குமுன் ஆங்கிலத்தில் கல்வி பயின்றனர். அவர்களில், திருவாட்டி ஜான்சிராணி உட்பட ஆறு இந்தியர்கள், மூன்று மலாய் மாணவர்கள் ஆகியோர் இருந்தனர்; மற்ற அனைவரும் சீன மாணவர்களே. இந்தியர்களில் ஐவர் பெண்கள்; ஒருவர் மட்டும்தான் ஆண்.
திருவாட்டி ஜான்சிராணியுடன் சுவிஸ் காட்டேஜ் ‘ப்ரி-யு’ (Pre-U) நிலையத்தில் படித்த மற்றொரு மாணவரும் நன்யாங் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். மற்றபடி, புதிய நட்புகளையே உருவாக்க வேண்டியிருந்தது.
“தங்களுக்கான பல்கலைக்கழக இடங்களை நாங்கள் எடுத்துக்கொண்டோம் எனச் சீன மாணவர்கள் கருதவில்லை; எங்களுடன் நன்றாகப் பழகினார்கள். அவர்கள் விடாமுயற்சியுடன் படித்தார்கள். எனக்கு ஆங்கிலம் நன்றாக வரும் என்பதால் நான் எழுதும் குறிப்புகளை இரவல் பெறுவார்கள்,” என்றார் திருவாட்டி ஜான்சிராணி.
“ஆசிரியர்கள் சீன மாணவர்களுக்கும் மற்ற இனத்தவருக்கும் இடையே எந்தப் பாரபட்சமும் பார்க்கவில்லை. ஆசிரியர்கள் இரு மொழிகளிலும் பாடம் நடத்துவர். சிலர் முழுமையாக ஆங்கிலத்தில் பாடம் நடத்துவார்கள்; சிலர் எங்கள் சம்மதத்துடன் பாடத்தின் இறுதியில் சீன மொழியிலும் விளக்கம் அளிப்பார்கள். அதை நாங்கள் சிரமமாகக் கருதவில்லை; பாடம் முடியும்வரை அங்கிருப்போம்,” என்று அவர் கூறினார்.
“எங்களுக்கு மாண்டரின் வகுப்புகளும் இருக்கும். அதனால், எனக்கு அது ஓர் அந்நிய மொழியாகத் தெரியவில்லை. என்னால் பேச முடியாவிட்டாலும் அம்மொழி புரியும். சீனத் திரைப்படங்களைப் பார்க்கும்போது சிலமுறை துணைவாசகங்கள் இல்லாமலேயே எனக்குப் புரியும்,” என்றார் அவர்.
சமையலும் ஒரு பண்பாட்டுப் பாலமே
திருவாட்டி ஜான்சிராணியும் சக நண்பர்களும் பல்கலைக்கழகத் தங்குவிடுதியிலேயே தங்கிப் படித்தார்கள்.
பல்கலைக்கழகத்தில் சீன உணவகமே இருந்ததால், பூன் லே உணவங்காடி நிலையத்துக்குச் சென்று சாப்பிடலாமென யோசனை வழங்கினார் பல்கலைக்கழக வேந்தர். தங்குவிடுதியில் சமைக்கவும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தங்குவிடுதியில் மீ கோரெங், மீ ஹூன், சோறு, மீன், ரசம் போன்றவற்றைச் சமைக்கும்போது அந்த நறுமணத்தால் கவரப்பட்டு திருவாட்டி ஜான்சிராணியின் பக்கத்து அறையில் வசித்த சீன மாணவர்கள் அவரது சமையலைச் சுவைத்ததும் உண்டு. நாளடைவில் அவரும் சீன உணவு உண்ணக் கற்றுக்கொண்டார்.
“என் நண்பர் ஜஸ்விந்தர் கோர் எனக்கு பிரெஞ்சு டோஸ்ட் செய்யக் கற்றுக்கொடுத்தார். அதை நான் என் தாயார், அண்டைவீட்டாருக்குக் கற்பித்தேன். மற்றொரு நண்பர் நினா சச்தேவ், தன் தந்தை எடுத்துவரும் கொண்டைக்கடலையையும் சப்பாத்தியையும் எங்களுடன் பகிர்ந்து உண்பார்,” என அவர் நினைவுகூர்ந்தார்.
நோன்புப் பெருநாளுக்கு மலாய் நண்பர்கள் வீட்டுக்குச் சென்ற மலரும் நினைவுகளும் உண்டு.
மனத்தில் நீடிக்கும் தொடர்புகள்
பல்கலைக்கழகப் படிப்புக்குப்பின் ஒவ்வொருவரும் அவரவர் வழியில் சென்றனர். பலரும் ஆசிரியர்களாகினர்.
கல்வித்துறையில் 35 ஆண்டுகள் பணியாற்றியபின் திருவாட்டி ஜான்சிராணிக்கு ஓய்வுபெறும் தருவாயில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடலில், தம்முடன் படித்த பலரையும் மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
தமது வாழ்க்கைப் பாதையில் அவ்வப்போது பல்கலைக்கழக நண்பர்களை மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்ததிலும் அவர் மனநிறைவடைகிறார்.
“பல்கலைக்கழகத் தங்குவிடுதியில் என்னுடன் வசித்த நண்பர் திருவாட்டி முவீ லுவாங் உடன் நெடுங்காலம் தொடர்பில் இருந்தேன். அவர் என் குழந்தைப் பிறந்தபோதுகூட என்னைச் சந்திக்க வந்தார். அதன்பின்புதான் தொடர்பு விட்டுப்போனது.
“இதற்கிடையே, மற்றொரு சீன நண்பரைத் தற்செயலாகச் சந்தித்தேன். அவரும் ஆசிரியராகியிருந்தார். டன்னன் உயர்நிலைப்பள்ளியில் வரலாறு ஆசிரியராக நான் பணிபுரிந்தபோது என் தோழி நினா சச்தேவ் அங்குப் பொருளியல் கற்பித்தார்,” என்றார் திருவாட்டி ஜான்சிராணி.
மாணவராகக் கற்றதை ஆசிரியராகக் கற்பித்தார்
அன்று சீன, மலாய் நண்பர்களுடன் படித்த அனுபவம், ஆசிரியராகத் திருவாட்டி ஜான்சிராணியின் சொந்தக் கற்பித்தல் முறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஃபூஹுவா உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியபோது தேசியக் கல்விச் செயற்குழுவில் இருந்த அவர் இன நல்லிணக்கத் தினத்திற்கு இருமுறை ஏற்பாடுசெய்தார்.
“ஒருமுறை, மாணவர்கள் ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு மொழிகளில் தேசியப் பற்றுறுதியைக் கற்று ஒப்பித்தனர். மற்றொரு முறை எந்த வகுப்பில் மாணவர்கள் அதிக அளவில் பாரம்பரிய உடைகள் அணிந்துவந்தார்களோ அவர்களுக்குப் பரிசு வழங்கினோம்.
“சில மாணவர்கள் தங்கள் வீட்டிலுள்ள உடைகளை இரவல் தருவார்கள். என் சக ஆசிரியர்களுக்குச் சேலை கட்ட உதவினேன்; சீன ஆசிரியர் ஒருவர் ஒரு குர்த்தா வாங்கி அணிந்தார். நான் பாஜு குரோங் அணிந்து செல்வேன்,” என்றார் திருவாட்டி ஜான்சிராணி.
இப்போது அவரது பேரப்பிள்ளைகளும் சீன, மலாய் உடைகளை அணிந்துப் பள்ளிக்குச் செல்வதைப் பார்த்து அவர் பெருமைப்படுகிறார்.
அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் நெறிகள்
தாம் எழுதும் சிறுவர் நூல்களில் இன நல்லிணக்கக் கூறுகளை வலியுறுத்துகிறார் திருவாட்டி ஜான்சிராணி. ‘ராமுவும் ராக்கியும்’ என்ற தலைப்பில் தாம் எழுதிய முதல் நூலில் ராமுவுக்குச் சீன, மலாய் நண்பர்கள் இருப்பார்கள்.
‘பாட்டியின் விசித்திரத் தோட்டம்’ கதையில் சீனப் பாட்டியும் அவரது பேரனும், தாங்கள் நீர் வேளாண்மை (hydroponics) முறையில் வளர்த்த காய்கறிகளையும் பழங்களையும் இந்திய அண்டைவீட்டாருக்குக் கொடுப்பார்கள்.
‘டிராகனைத் தேடி’ சிறுவர் நாவலில் மையக் கதாபாத்திரம் தமிழ் இளவரசராக இருந்தாலும், சீன நாட்டின் வரலாற்றைப் பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கம்பத்தில் வாழும் காலத்தில் இன நல்லிணக்கம் இயற்கையாகவே நிலவியது. சீனக் கம்பத்தில் வாழும் தமிழர் சீன மொழி பேசுவார். எங்கள் சுற்றத்தில் வசிக்கும் சீனர்கள் எங்கள் வீட்டுக்கு வருவார்கள்; தமிழில் பேசுவார்கள். இப்போதுதான் நிலைமை மாறியுள்ளது. அவரவர் தங்கள் அடுக்குமாடி வீட்டுக் கதவை மூடியதும் அந்த தொடர்பு விட்டுப் போகிறது. இன நல்லிணக்கத்தை அதிகம் வலியுறுத்த வேண்டியுள்ளது,” என்றார் திருவாட்டி ஜான்சிராணி.
“மற்ற இன நண்பர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று சொல்லித்தான் நான் என் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் வளர்த்திருக்கிறேன். இன அடிப்படையில் யாரிடமும் பாரபட்சம் காட்டக்கூடாது,” என்றார் அவர்.