மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் எல். முருகன்
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், மத்திய இணை அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான எல். முருகன் தனது பதவிகளைத் துறந்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எல். முருகன், இந்திய கலாச்சார, ஒலிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை ஆகிய இலாகாக்களின் இணை அமைச்சராகப் பணியாற்றி வந்தார். தனது பதவி விலகல் கடிதத்தைப் பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
அதில், எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த தமக்குத் தேசத்திற்கும் தமிழகத்திற்கும் பணியாற்றும் மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் பணிகளிலும், எதிர்வரும் 2029 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் பணிகளிலும் தம்மை முழுநேரமாக ஈடுபடுத்திக் கொள்ள விரும்புவதாகவும் அதற்கு ஏதுவாக, மத்திய இணை அமைச்சர் பொறுப்பில் இருந்தும், மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்தும் தம்மை விடுவிக்குமாறும் திரு முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
எல். முருகனின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் 2030ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், அவர் முன்கூட்டியே பதவி விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசியலில் தீவிர களப்பணியாற்றும் நோக்கில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.