டில்லியில் நடக்கும் போராட்டங்களால் வணிகம் கடும் பாதிப்பு: தலைமை நீதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவருக்கு வர்த்தகர்கள் கடிதம்
புதுடில்லி: ‘டில்லியில் நடத்தப்படும் போராட்டங்களால் வர்த்தகம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என, பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆகியோருக்கு, டில்லி வர்த்தக சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் மற்றும் கரப்பான் பூச்சி கட்சி ஆகியவை, டில்லியில் 10ம் தேதி போராட்டம் அறிவித்து இருந்தன. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால், போராட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது. அதேநேரத்தில், ஏற்கனவே மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரி கரப்பான்பூச்சி கட்சியினர் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை, கலைந்து போக மறுத்தது போன்றவற்றால், சுதாரித்து கொண்ட டில்லி போலீசார், மீண்டும் அறிவித்த போராட்டத்தை முன்னிட்டு மெட்ரோ ரயில் நிலையங்களை மூட நடவடிக்கை எடுத்தனர். டில்லி நோக்கி வந்த நுாற்றுக்கணக்கான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பஸ் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது. இதனால், டில்லியின் பல இடங்களில் வியாபாரிகள் கடைகளை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு, புதுடில்லி வர்த்தகர்கள் சங்கம் நேற்று அனுப்பியுள்ள கடிதம்:
டில்லி மாநகரில் வர்த்தகர்கள் தங்கள் தொழிலை செய்யும் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும். வணிகப் பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சமீப காலமாக நடக்கும் போராட்டங்களால் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும், பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதிலும் வர்த்தகர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர். மார்க்கெட்டுகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஏற்படும் இடையூறுகள், ஏராளமான கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதித்துள்ளது.
டில்லியில் பாதுகாப்பான வணிகச் சூழலை உறுதி செய்யவும், வர்த்தகர்களைப் பாதுகாக்கும் சட்ட விதிகளை வலுப்படுத்தவும், மார்க்கெட்களுக்கு வாடிக்கையாளர்கள் எந்த அச்சமும் இல்லாமல் வருவதையும், தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களுக்குச் செல்வதையும் தடுக்கும் இடையூறுகள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பண்டிகை காலம் தொடங்கி விட்டதால் இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து, வர்த்தகத்தை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு, இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் பன்சால் அனுப்பியுள்ள கடிதம்:
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பான போராட்டங்களை காங்கிரஸ் கட்சி கைவிட வேண்டும். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டத்தால், டில்லியில் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலம் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், இந்தப் போராட்டங்கள் வர்த்தகர்களிடையே நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. நவராத்திரி முதல் சத் பூஜை வரையிலான காலம், நாடு முழுதும் அனைத்து வியாபாரங்களும் மிகவும் முக்கியமான காலம்.
பண்டிகைக் கால வியாபாரத்தை நம்பியே, கோடிக்கணக்கான வியாபாரிகள், ஊழியர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் இருக்கின்றனர். ஆனால், இந்தப் போராட்டங்களால் அனைவரது வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி விட்டது.
இந்தப் போராட்டங்கள் நம் நாட்டில் நிலையற்ற தன்மையையும், அச்சத்தையும் உருவாக்கியுள்ளன. இது, மார்க்கெட்டுகள் மற்றும் வணிக நடவடிக்கைகளை மோசமாக பாதித்துள்ளது.
பாரதிய உத்யோக் வியாபார் மண்டல் அமைப்பு, ராகுலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘டில்லி மாநகரில் தொடர்ச்சியான அரசியல் பேரணிகள், போராட்டங்கள் போன்றவற்றால் சிறு தொழில் நிறுவனங்கள், சில்லறை விற்பனை ஊழியர்கள் மற்றும் தினக்கூலித் தொழிலாளர்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் வியாபார் மஹா சங்கம், ராகுலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘அரசியல் ஆதாயங்களுக்காக நடத்தப்படும் போராட்டங்களால், வர்த்தகர்களின் நலன்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எளிதாக வணிகம் செய்வதற்கான சூழல் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் போராட்டங்களால், வர்த்தகத்துக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தப் போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து, வர்த்தக சமூகத்தின் நலன்களை பாதுகாக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி சூர்யகாந்திடம், ‘பெடரேஷன் ஆப் ஆல் இந்தியா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் அசோசியேஷன்ஸ்’ கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
பண்டிகை காலத்தில் தெருக்களில் நடக்கும் போராட்டங்கள், சாலை மறியல்கள் மற்றும் கடையடைப்புகள் ஆகியவற்றால் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது, ஜனநாயக சுதந்திரத்தின் துஷ்பிரயோகம். மிக முக்கியமான பண்டிகைக் காலத்தில், சாலைகளை முடக்கவும், பொதுப் போக்குவரத்தைத் தடுக்கவும், மார்க்கெட்டுகளை வலுக்கட்டாயமாக மூடவும், தெருப் போராட்டங்களை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவது, ஜனநாயக சுதந்திரத்தின் அப்பட்டமான துஷ்பிரயோகம். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு, ஜெய்ப்பூர் வியாபார் மஹா சங்கம் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘டில்லியில் நடக்கும் போராட்டங்களால், முக்கியப் பொருளாதார வழித்தடங்கள் முடக்கப்பட்டுள்ளன. வணிக மற்றும் தொழில்நுட்ப மையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.