மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
அமெரிக்கா தங்கள் மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடுக்கக்கூடும் எனத் தங்களிடம் உளவுத் தகவல் இருப்பதாக ஈரான் கூறியதை அடுத்து, மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் உள்ள அரசுகள் போர்ப் பதற்றம் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்த்து அச்சூழலுக்குத் தயாராகி வருகின்றன.
அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ ஓய்வு இல்லமான கேம்ப் டேவிட்டில் வார இறுதி நாள்களில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்திலிருந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னதாகவே திரும்பியதைத் தொடர்ந்து தாக்குதல்கள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன. அதே வேளையில், அந்தப் பகுதியில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கான புதிய பாதுகாப்பு எச்சரிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலும் ஒரு பரந்த இராணுவப் பதிலடிக்கு வழிவகுக்கும்" என்றும், "அந்த தாக்குதல்கள் இந்தியப் பெருங்கடலில் இயங்கும் அமெரிக்க கடற்படைக் கப்பல்களுக்கும் நீட்டிக்கப்படலாம்" என்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) எச்சரித்துள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதி இயக்கம் ரியாத் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மாநிலத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால், மத்திய கிழக்கில் பரந்த அளவிலான மோதல் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இதற்கிடையில், ஈரானில் இடம்பெற்ற பெருந்திரள் போராட்டங்களை ஒடுக்கியபோது அந்நாட்டு அதிகாரிகளால் மனித உரிமை மீறல்களும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் இழைக்கப்பட்டதாக, ஈரானுக்கான தன்னிச்சையான உலகளாவிய உண்மை கண்டறியும் குழு அறிக்கை அளித்துள்ளது. ஈரானுடனான மோதலின்போது அமெரிக்கா போர்க்குற்றங்களை இழைத்திருக்கலாம் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தனது இராணுவ அழுத்தத்தைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான தடைகளை நீக்கினால், ஏழு நாட்களுக்குள் ஹர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் முன்வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு முகவர்கள் மூலமாக இந்தத் திட்டம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹர்முஸ் நீரிணை என்பது உலகளாவிய ஆற்றல் பகிர்மானத்திற்கான ஒரு முக்கியமான வழியாகும், மேலும் இதில் இடம்பெறும் எந்தவொரு இடையூறும் உலகளாவிய கப்பல் போக்குவரத்து மற்றும் எண்ணெய் விநியோகத்தை பாதிக்கக்கூடும்.