மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; அமைச்சர் நிர்மல் குமார் ஆய்வு
மதுரை: ‘‘மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான முன்னோட்டம் செப்.,11ல் துவங்குகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக கோயிலைச் சுற்றியுள்ள பழமையான கட்டடங்களில் வெளிநபர்களை அனுமதிக்கக்கூடாது என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது’’ என அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 17ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு இன்று கோயிலில் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு செய்தார். எம்.எல்.ஏ.,க்கள் மதார் பாதுருதீன், கருப்பையா, கோபிசன், கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், அறங்காவலர் செல்லையா, கோயில் இணைகமிஷனர் செல்லத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உள்ளூர் விடுமுறையா; ஆய்வுக்கு பின் நிர்மல்குமார் கூறியதாவது: கும்பாபிஷேகம் அழைப்பிதழ் கொடுக்கும் பணி நடந்து வருகிறது. முதல்வர் விஜய் வருவது குறித்து இன்னும் முடிவாகவில்லை. கோயில் பகுதியில் பாதாள சாக்கடை நீர் ஓடாமல் இருக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒருவாரத்தில் அனைத்து துறைகளும் கும்பாபிஷேகத்திற்கு தயாராகிவிடும். செப்.,11 முதல் கும்பாபிஷேக பாதுகாப்பு ஏற்பாடுகள் துவங்கி முன்னோட்டம் பார்க்கப்படும். செப்.,17 உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்து ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும். கும்பாபிஷேகத்தை கோயில் மேல்புறத்தில் இருந்து 8 ஆயிரம் பேர் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றியுள்ள பழமையான கட்டடங்களில் வெளிநபர்களை அனுமதிக்கக்கூடாது என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
விஜய் பிரதமராக வரவேண்டும் என ஒட்டுமொத்த இந்திய மக்களும் ஆசைப்படுகிறார்கள். அது அந்தந்த சூழ்நிலையை பொறுத்தது. இப்போதைக்கு இதுகுறித்து பேச வேண்டியதில்லை. பரந்துார் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பது குறித்து முதல்வர் முடிவு செய்வார்.
ஜல்லிக்கட்டு பேச்சு அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் தனது இருப்பை காட்ட தினமும் ஏதாவது சம்பந்தமில்லாமல் கூறிவருகிறார். அக்கட்சியை கெடுப்பதே அவர்தான். பழனிசாமிக்கு பதிலாக தனக்கு பொதுச்செயலாளர் பதவியை கேட்டாலும் கேட்பார். சட்டசபையில் ஜல்லிக்கட்டு குறித்து சோழவந்தான் எம்.எல்.ஏ., கருப்பையா, ‘ஜல்லிக்கட்டு நமது பண்பாடு’ என்றே பேசினார். அவர் முழுமையாக பேசவந்தபோது மைக் ‘கட்’டாகி விட்டது. அதனால் அதுகுறித்து தவறாக பேசப்படுகிறது. தி.மு.க.,வினர் கருணாநிதி பெயரை வைக்க ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் கட்டினர். ஜல்லிக்கட்டு என்பது மக்களின் உணர்வுப்பூர்வமானது. தமிழர் பண்பாட்டை தாங்கி நிற்பது. அந்தந்த ஊர்களில் நடத்துவதுதான் சரியாக இருக்கும். அந்த ஸ்டேடியத்தை என்ன செய்வது என்பது வரும் காலங்களில் தெரியும். இவ்வாறு கூறினார்.
வீரவசந்தராயர் மண்டபம் நாளை திறப்பு; மீனாட்சி கோயிலில் 2018 பிப்.,2ல் ஏற்பட்ட தீ விபத்தில் கிழக்கு ராஜகோபுரத்தையொட்டி உள்ள வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் சிதலமடைந்தது. 8 ஆண்டுகள் புனரமைப்பு பணி நடந்தது. நாளை (ஆக.,30) முதல் பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படுகிறது. இதையொட்டி நாளை காலை 9:00 – 9:15 மணிக்கு மண்டப பிரதிஷ்டை நடக்கிறது. அதைதொடர்ந்து அம்மன், சுவாமிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.
அறங்காவலர் பெயர்கள் இல்லாதது ஏன்? கும்பாபிஷேக அழைப்பிதழில் அறங்காவலர் குழுத்தலைவரும், தி.மு.க., முன்னாள் அமைச்சர் தியாகராஜனின் தாயாருமான ருக்மணி தலைமையிலான 5 அறங்காவலர்கள் பெயர்கள் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: ‘புரோட்டாகால்படி’ கோயில் நிர்வாகம் பத்திரிகை அச்சிட்டுள்ளது. அதில் எந்த தனி நபருக்கும் இடம் கிடையாது. தி.மு.க., ஆட்சியில் அக்கட்சி நிர்வாகிகளைதான் அறங்காவலர் குழுவில் நியமித்தனர். த.வெ.க., ஆட்சியில் அதெல்லாம் இல்லை. யாரெல்லாம் கோயிலுக்கு பணியாற்றுகிறார்களோ அவர்கள் அறங்காவலர்களாக தேர்வு செய்யப்படுவர். முன்னாள் அமைச்சர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் என்ன சம்பந்தம். அவர்களா கோயிலை கட்டினர். தனிநபர் யாருக்கும் கோயில் சொந்தம் கிடையாது. தனிப்பட்ட பெயரை போட வேண்டும் என்று கூறும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. இவ்வாறு கூறினார்.
திருவேற்காடு: திருவேற்காடு தேவி கருமாரியம்மன் ...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ...
செஞ்சி: மேலச்சேரி ஆதி திரவுபதியம்மனுக்கு ஜெயந்தி விழா ...
பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் தர்ம சாஸ்தா ஐயப்பன் ...
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காடு ஸ்ரீ சங்கரி சாரதம் ...
சோழவந்தான்: திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் திருப்பாசுர ...