📅 Monday, 19 October 2026 IST | ஐப்பசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 19, 2026 11:03 AM

மும்பையில் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச் சூடு

மும்பையில் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச் சூடு

மும்பை: இந்தி நடிகர் டைகர் ஷெராஃப் சென்ற வாகனத்தின்மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் காரணமாக அங்கு பதற்றம் நிலவுகிறது.

மும்பையின் ஜூஹூ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) இரவு அச்சம்பவம் நிகழ்ந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. அதிர்ஷ்டவசமாக, இத்தாக்குதலில் டைகர் ஷெராஃப் எவ்விதக் காயமுமின்றித் தப்பினார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில், ஜூஹூ பகுதியில் உள்ள காற்பந்துத் திடலில் விளையாடிவிட்டு டைகர் ஷெராஃப் தனது காரில் புறப்படத் தயாரானபோது இச்சம்பவம் நிகழ்ந்தது. மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள், காரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடினர்.

இந்தத் தாக்குதலில் டைகர் ஷெராஃபின் கார் ஓட்டுநர் ஃபிர்தௌஸ் என்பவரின் இடது கையில் குண்டு பாய்ந்து காயமடைந்தார். மேலும், அருகே நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இருவரும் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மும்பை குற்றப்பிரிவுக் காவல்துறையினர், அப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

குற்றவாளிகளைக் கண்டறிய 15 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, சமூக ஊடகப் பதிவொன்றின் மூலம் இத்தாக்குதலுக்கு குண்டர் கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ஏற்கெனவே இந்தி நடிகர் சல்மான் கானைக் கொலை செய்ய முயற்சி செய்தவர் என்று கூறப்படுகிறது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

மேலும், டைகர் ஷெராஃப் மீதான தாக்குதலையடுத்து, "சல்மான் கானுடன் இணைந்து நடிப்பது யாராக இருந்தாலும், அவர்களுக்கும் இதே கதிதான்,” என அக்கும்பல் எச்சரித்துள்ளது.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மும்பை காவல்துறை ஆணையரைத் தொடர்புகொண்டு இச்சம்பவம் குறித்து விரைவாக விசாரணை நடத்தி, குற்றவாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அவர் டைகர் ஷெராஃப்புடனும் கைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினார்.