முன்னாள் அமைச்சர் ரகுபதியின் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
முன்னாள் அமைச்சர் ரகுபதியின் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - உச்ச நீதிமன்றம்
திமுக சார்பில் போட்டியிட்ட ரகுபதி 58,201 வாக்குகளும், தவெக வேட்பாளர் சிந்தாமணி 56,709 வாக்குகளும் பெற்றனர். சுமார் 1492 வாக்கு வித்தியாசத்தில் ரகுபதி வெற்றி பெற்றார்.
Published : October 7, 2026 at 8:31 PM IST
புதுடெல்லி: திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதியின் தேர்தல் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ரகுபதி 1,492 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட ரகுபதி 58,201 வாக்குகளும், தவெக வேட்பாளர் சிந்தாமணி 56,709 வாக்குகளும் பெற்றனர். இந்நிலையில், ரகுபதி வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் சிந்தாமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.
தவெக வேட்பாளர் சிந்தாமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "திருமயம் தொகுதிக்குட்பட்ட 2, 8, 63, 64, 65, 70, 76, 138, 139, 145, 153, 154, 158, 162, 230, 285, 292 ஆகிய வாக்குச்சாவடிகளில் வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறவில்லை.
இந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ய வேண்டும். அதே போன்று 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனக்கு எதிராக 26 குற்ற வழக்குகள் இருப்பதாக ரகுபதி தெரிவித்திருந்தார். ஆனால், 2026 தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அது தொடர்பான தகவல்கள் இடம்பெறவில்லை" என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், தேர்தல் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் தொடர்ந்த வழக்கை தொடக்க நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என ரகுபதி தரப்பிலும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே ரகுபதி மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், தவெக வேட்பாளர் சிந்தாமணி முன் வைத்த குற்றச்சாட்டுக்களில் போதுமான அடிப்படை விவரங்கள் இல்லை எனக் கூறி கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வழக்கை தள்ளுபடி செய்தார்.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிந்தாமணி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பிரசாந்த் குமார் மற்றும் சந்திரசேகர் அமர்வு தவெக வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.