📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 19, 2026 08:04 PM

நான்கு தொடக்கப்பள்ளிகளில் பெற்றோர் தொண்டூழியர் திட்டம் ரத்து

நான்கு தொடக்கப்பள்ளிகளில் பெற்றோர் தொண்டூழியர் திட்டம் ரத்து

கடந்த இரண்டு ஆண்டுகளில் மேலும் நான்கு தொடக்கப்பள்ளிகள் பெற்றோர் தொண்டூழியர் திட்டத்தை ரத்துச் செய்துள்ளன.

ஃபேர்ஃபீல்ட் மெத்தடிஸ்ட் பள்ளியும் மீ தோ பள்ளியும் 2026ஆம் ஆண்டில் இத்தகைய பெற்றோர் தொண்டூழியர்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்தின; அதேவேளையில் ஹோங் வென் பள்ளியும் ரோசைத் பள்ளியும் சென்ற ஆண்டிலேயே இதைச் செய்துவிட்டன.

பெற்றோர், தங்கள் பிள்ளைகளைத் தொடக்கநிலை ஒன்றில் பதிவுசெய்யும்போது முன்னுரிமை இடத்தைப் பெற உதவும் இத்திட்டம், புகழ்பெற்ற பள்ளிகளுக்குள் நுழைவதற்கான ஒரு வழியாகக் கருதப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், பள்ளி நிகழ்வுகளுக்கு உதவுவது, போக்குவரத்து வழிகாட்டிகளாக அல்லது நூலகர்களாக இருப்பது போன்ற பணிகளைச் செய்வதன் மூலம் பெற்றோர் குறைந்தபட்சம் 40 மணிநேரத் தொண்டூழியப் பணிகளை நிறைவு செய்கின்றனர்.

ஆண்டுதோறும் நடைபெறும் தொடக்கநிலை ஒன்றுக்கான சேர்க்கை நடவடிக்கையின் 2பி கட்டத்தில் பதிவுசெய்ய அவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சமூகத் தலைவர்களின் பிள்ளைகள், தேவாலயம் அல்லது குலமரபுச் சங்கங்களுடன் தொடர்புடையவர்களும் இந்தக் கட்டத்தின்கீழ் தகுதி பெறுகிறார்கள்.

சிங்கப்பூரின் தொடக்கப்பள்ளிகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு தற்போது பெற்றோர் தொண்டூழியத் திட்டத்தை வழங்குவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்தது. இங்கு மொத்தம் 182 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விக்கு அது பதில் தந்தது.

இத்திட்டத்தை வழங்கும் பள்ளிகளின் எண்ணிக்கை, கடந்த சில ஆண்டுகளில் மிகவும் சீராக உள்ளது என்று அமைச்சு கூறியது. தற்போது பல்வேறு பின்னணிகளைக் கொண்ட பிள்ளைகளுக்குப் பள்ளிகளில் வாய்ப்பளிக்கவும் சமூகத்தில் உள்ள பல்வேறு தரப்பினர் கலந்துபழகுவதை ஊக்குவிக்கவும் தொடக்கநிலை ஒன்றுக்கான பதிவு முறையை அது மறுஆய்வு செய்து வருகிறது.

தொடக்கநிலை ஒன்றுக்கான பதிவுக் கட்டமைப்பில், பழைய மாணவர்கள், தொண்டூழியர்களாக இருக்கும் பெற்றோர் அல்லது அருகில் வசிப்போரின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து நீண்டகாலமாக ஆராயப்பட்டு வருகிறது. பெற்றோர் சிலர் தங்களுக்கு விருப்பமான பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க வீடுகளைக் கூட மாற்றுகின்றனர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

ஃபேர்ஃபீல்ட் மெத்தடிஸ்ட், ரோசைத் பள்ளிகள், தங்களது நடவடிக்கைகளுக்கும் திட்டங்களுக்கும் பெற்றோர் ஆதரவுக் குழுக்களிடம் இருந்து வலுவான ஆதரவு கிடைப்பதாக இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளன. அக்குழுக்களில் அப்பள்ளியில் தற்போது பயிலும் மாணவர்களின் பெற்றோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நான்கு பள்ளிகளும் பெற்றோர் தொண்டூழியத் திட்டத்தை ஏன் நிறுத்தின என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டன அல்லது பதிலளிக்கவில்லை.