நெல் கொள்முதல் கிடங்குகள் முக்கியம் என்பதை முதல்வர் ஏன் உணரவில்லை? நயினார், அன்புமணி கேள்வி
நெல் கொள்முதல் கிடங்குகள் முக்கியம் என்பதை முதல்வர் ஏன் உணரவில்லை? நயினார், அன்புமணி கேள்வி
சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் அமைந்துள்ள தொழுப்பேடு பகுதியின் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் அடுக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.
நவீன நெல் சேமிப்பு கிடங்குகளை அதிகப்படுத்துவதை விட்டுவிட்டு, ரூ.10 கோடியில் வெறும் 43,500 விவசாயிகளுக்கு மட்டும் தார்பாய்கள் வழங்கப்படும் என்று தவெக அரசு அறிவித்தால், விளைவித்த பொருட்கள் எப்படி பாதுகாக்கப்படும்? மீதமுள்ள விவசாயிகளின் மொத்த உழைப்பும் இப்படி மழையில் நனைந்து வீணாகி விடும் என்பதை முதல்வர் விஜய் சிந்திக்க வேண்டாமா? தமிழகத்தில் உள்ள திறந்தவெளி அரசு கொள்முதல் நிலையங்களுக்கு மேற்கூரை அமைப்பதுதான் முக்கியம் என்பதை முதல்வர் ஏன் உணரவில்லை?.
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு சமத்துவபுரத்திற்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளிக் கிடங்கில் 50 ஆயிரம் டன், அதாவது 12.50 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. அதிகபட்சமாக 2025-26ம் ஆண்டில் வரலாறு காணாத வகையில் 65 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், நெல் கொள்முதலை மேற்கொள்ளும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் வெறும் 18 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் தான் உள்ளன.
இது தமிழ்நாட்டில் விளையும் உணவு தானியங்களில் வெறும் 15 சதவீதம் மட்டுமே. இது போதுமானதல்ல. நெல் மூட்டைகள் வீணாவதைத் தடுக்க கிடங்குகளை அதிகப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாவது கிடங்குகளை கட்டி நெல் மூட்டைகள் வீணாகாமல் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.