📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 31, 2026 10:00 AM

NEPAL FLOODS : பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகளில் இருந்தவர்கள் தமிழர்களா! நடந்தது என்ன?

NEPAL FLOODS : பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகளில் இருந்தவர்கள் தமிழர்களா! நடந்தது என்ன?

NEPAL FLOODS : பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகளில் இருந்தவர்கள் தமிழர்களா! நடந்தது என்ன?

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 49 கைலாஷ் யாத்திரை தமிழர்கள் குறித்து வெளியான சிசிடிவி காட்சி மற்றும் புதிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளம் - சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியுள்ள சென்னை உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 49 கைலாஷ் யாத்திரை பயணிகளின் நிலை குறித்து தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இதனிடையே, வெள்ளத்தில் இருந்து தப்பிக்க ஓடும் வகையில் வெளியான சிசிடிவி காட்சியில் காணப்படும் நபர்கள் தங்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் தான் என பயண ஏற்பாட்டு நிறுவன உரிமையாளர் மறவேள் தெரிவித்துள்ளார்.

சென்னை குரோம்பேட்டையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் "மகாதேவ் கைலாஷ் யாத்ரா" நிறுவனம் சார்பில் கடந்த 14ஆம் தேதி 49 பேர் கொண்ட ஆன்மீக பயணக் குழு கைலாஷ் யாத்திரைக்கு புறப்பட்டது. இந்த குழுவுக்கு டிராவல்ஸ் உரிமையாளர் மறவேளின் மகன் சத்ய நாராயணன் தலைமை வகித்தார்.

இந்த பயணக் குழுவில் சென்னை குரோம்பேட்டை, பெரம்பூர், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றிருந்தனர்.

இமயமலை பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு :

திபெத்தின் இமயமலை பகுதியில் கடந்த 26ஆம் தேதி ஏற்பட்ட மிகப்பெரிய பனிச்சரிவை தொடர்ந்து காட்டாற்று வெள்ளம் உருவானது. இதன் தாக்கம் நேபாளத்தின் பல பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டது.

வெள்ளத்தின் வேகத்தில் வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன. இந்த இயற்கை பேரிடரில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடியேற்ற மையத்தில் இருந்தபோது ஏற்பட்ட பேரழிவு :

கைலாஷ் யாத்திரையை முடித்துவிட்டு சென்னை திரும்புவதற்காக இருந்த இந்த குழுவினர், நேபாளம் - சீன எல்லையில் அமைந்துள்ள குடியேற்ற அலுவலகத்தில் பயண நடைமுறைகளை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் காரணமாக அந்த குடியேற்ற அலுவலக கட்டிடமே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அங்கு இருந்த 49 தமிழர்களின் பாதுகாப்பு குறித்து கவலை ஏற்பட்டுள்ளது.

"நீல நிற உடையில் ஓடும் நபர்கள் எங்கள் குழுவினர்" - மறவேள் :

வெள்ள பாதிப்பு தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சியில், நீல நிற உடை அணிந்து சிலர் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க ஓடும் காட்சி பதிவாகியுள்ளது.

இந்த காட்சியில் இருப்பவர்கள் தங்களது கைலாஷ் யாத்திரை குழுவைச் சேர்ந்தவர்கள் தான் என டிராவல்ஸ் உரிமையாளர் மறவேள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "குடியேற்ற மையத்தின் வெள்ள பாதிப்பு சிசிடிவி காட்சியில் நீல நிற உடையில் தப்பி ஓடும் நபர்கள் எங்கள் குழுவினர் தான். வெள்ளத்தில் இருந்து தப்பிக்க அவர்கள் மலைப்பகுதியை நோக்கி ஓடியுள்ளனர். சிலர் உயிர் தப்பியிருக்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் சீன பகுதிக்குள் சென்றுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

"முழு பகுதியும் 6 அடி உயர சேற்றால் மூடப்பட்டுள்ளது" :

மேலும் அவர் கூறும்போது, "அந்த பகுதி முழுவதும் சுமார் 6 அடி உயரம் வரை சேறு படிந்துள்ளது. எங்கள் மூன்று குழுக்களும் இந்த வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளனர். வெள்ள பாதிப்பு குறித்து நேபாள அரசு தரப்பில் இருந்து மட்டுமே தகவல்கள் கிடைத்து வருகின்றன. சீன அரசு மூலம் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. எங்கள் குழுவினர் சீன பகுதிக்குள் சிக்கியுள்ளனர்" என்றார்.

49 தமிழர்களின் நிலை குறித்து தொடரும் கவலை:

கைலாஷ் யாத்திரைக்குச் சென்ற 49 தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து உறுதியான தகவல் கிடைக்காத நிலையில், அவர்களது குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.

பயணிகளை பாதுகாப்பாக மீட்க தேவையான நடவடிக்கைகளை அரசு மற்றும் தூதரக அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.