கூட்டணி கட்சிகள் நெருக்கடி எதிரொலி: இடைத்தேர்தல் நடத்த த.வெ.க., ஆர்வம்
- நமது நிருபர் -
கூட்டணி கட்சிகளின் நெருக்கடியில் இருந்து விடுபட்டு, தனிப் பெரும்பான்மை பெற, இடைத்தேர்தலை விரைவாக சந்திக்க, முதல்வர் விஜய் ஆர்வம் காட்டுவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபை தேர்தலில், முதல்வர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது.
பின், தி.மு.க., கூட்டணியில் இருந்த, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன், ஆட்சி அமைத்தது.
ஆட்சிக்கு ஆதரவு அளித்த நிலையில், விலைவாசி உயர்வை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் நடத்தியது. தலைமைச் செயலருக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போர்க்கொடி துாக்கியுள்ளது.
பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிலைப்படுத்தி, காங்., குடைச்சல் தருகிறது. தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடர் மற்றும் கொள்கை முடிவுகளில், தங்கள் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் என, வி.சி.க., நெருக்கடி தருகிறது.
இப்படி கூட்டணி கட்சிகள் தரும் நெருக்கடிகளை தவிர்க்க, தங்கள் சொந்த பலத்தில், நிலையான ஆட்சி தொடர வேண்டும் என, த.வெ.க., தலைமை விரும்புகிறது. அதற்காக, இடைத்தேர்தலில் ஆர்வம் காட்டி வருகிறது.
இதுகுறித்து, த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
தற்போதைய கூட்டணி ஆட்சியில், கொள்கை முடிவுகள் எடுப்பதிலும், ஆட்சி நிர்வாகத்திலும், கூட்டணி கட்சிகளின் தலையீடு அதிகமாக இருக்கிறது. த.வெ.க.,விற்கு சொந்த பலம் இருந்தால், கூட்டணி கட்சிகளை ஓரம் கட்டிவிட்டு சுதந்திரமாக ஆட்சி நடத்தலாம் என, முதல்வர் விஜய் கருதுகிறார்.
எனவே, காலியாக உள்ள தொகுதிகளில், இடைத்தேர்தல் நடத்த, நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக் கோரி, முதல்வர் விஜய், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசரமாக பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
காலியாக உள்ள தொகுதிகளில், இடைத்தேர்தல் நடந்து, த.வெ.க., வெற்றி பெற்றால், கட்சியின் பலம் அதிகரிக்கும். ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மையை பெற முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.