📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 02, 2026 09:04 PM

நீட் பேராட்டம்: மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

நீட் பேராட்டம்: மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

'நீட்' வினாத்தாள் கசிவு தொடர்பாக நடந்த போராட்டங்களின் போது, நாடு முழுதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.'நீட்' வினாத்தாள் கசிவு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, டில்லி ஜன்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சியினர் ஜூலை மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுதும் பரவிய இந்த போராட்டம் பல இடங்களில் வன்முறையாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாணவர்கள் மற்றும் குற்றப் பின்னணி இல்லாதோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட்டது.இந்நிலையில், மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவில், “மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே உரித்தான சிறப்பு அதிகாரமான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 142ஐ பயன்படுத்தி, அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்” என, கோரிக்கை வைக்கப்பட்டது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:டில்லி, பீஹார், மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் ஜூலை 20 முதல் 25 வரை நடந்த போராட்டங்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும், உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரமான அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி ரத்து செய்யப்படுகின்றன.பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட இதே போன்ற வழக்குகள் மீதும் மேற்கொண்டு எந்த விசாரணையும் நடத்தக் கூடாது. புதிய வழக்குகளை பதிவு செய்யவும் தடை விதிக்கப்படுகிறது.அதே நேரத்தில், தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகள்படி, டில்லியில் படுகாயம் ஏற்படுத்துதல் மற்றும் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துதல் போன்ற தீவிரக் குற்றங்களில் ஈடுபட்ட 2,873 நபர்கள் மீது மட்டும் டில்லி போலீசார் புதிய வழக்குப் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.'நீட்' தேர்வு தொடர்பாகத் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அகில இந்திய அளவிலான கொள்கையை மத்திய அரசு மூன்ற மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும். மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்படும் இக்கொள்கையின் கீழ் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “மாணவர் போராட்டங்கள் மீதான வழக்குகளைப் பின் தொடரப்போவதில்லை,” என, உறுதிமொழி அளித்தார்.உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மற்றும் மத்திய அரசின் உறுதிமொழியைத் தொடர்ந்து, வரும் 5ம் தேதி டில்லியில் நடத்தத் திட்டமிட்டிருந்த அமைதிப் பேரணியைத் திரும்பப் பெறுவதாகக் கரப்பான்பூச்சி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.