நகர்ப்புற வேளாண் நிலங்களை அபகரிக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு
புதிய சட்ட மசோதா, நகர் சார்ந்த, கிராமப்புற வாழ்வு நிலை மக்களின் வாழ்வுரிமை நிலைகளை பறிப்பதாகும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
02.09.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஒரு புதிய சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளார். நகர்ப்புற மேம்பாட்டிற்காக வேளாண் நஞ்சை நிலங்களை கையகப்படுத்த, நகர ஊரக அமைப்பு இயக்குனருக்கு அனுமதி வழங்கும் ஒரு சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.
இதன் மூலம், உள்ளாட்சி அமைப்புக .மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் பறிக்கப்பபடுகிறது. இது நகர்புற வளர்ச்சி என்பதின் பெயராலே, வேளாண்மையை அழித்திடும் நடவடிக்கையாகும்.
நஞ்சை நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என்றால் இதுவரை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலை பெற்ற பின் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்ற சட்ட பாதுகாப்பு 2017 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் நகர்ப்புற வளர்ச்சி தடைபடுகிறது என்ற பேரால் இந்த மசோதா கொண்டுவரப்படுவதாக அமைச்சர் கூறுகிறார்.
இந்த சட்ட மசோதா, நகர் சார்ந்த கிராமப்புற வாழ்வு நிலை மக்களின் வாழ்வுரிமை நிலைகளை பறிப்பதாகும். இதுவரை இதன் மீது மாவட்ட ஆட்சியருக்கு இருந்த அதிகாரத்தை பற்றி எதுவும் கூறாமல் இருந்தாலும், இந்த புதிய மசோதாவில் நகர்ப்புற வளர்ச்சி வேளாண் இயக்குனர் தலைமையில் அமைக்கப்படுகிற கமிட்டியில் ஒருவராக மாவட்ட ஆட்சியர் இருப்பாராம். மக்களின் மனசாட்சிக்கு பதில் சொல்ல வேண்டிய மாவட்ட ஆட்சியரை மடைமாற்றி நகர்ப்புற நஞ்சை மக்கள் பலியிடப்பட உள்ளனர்.
லட்சக்கணக்கான வீட்டு மனைகள், சிப்காட், சிட்கோ பெருந்திட்டம் என்ற பெயரால் எடுக்கப்பட்ட நிலங்கள், இதை பயன்படுத்தப்படாத நிலங்கள், வேளாண் விரோத சட்டங்கள் திட்டங்களால் விளை நிலங்கள் அருகி.. அதிலிருந்து வருமானம் பெற்ற விவசாயிகள் தொழிலாளர்கள், இதை நம்பி இருந்த மக்கள் வேறு வழியின்றி தவிக்கின்றனர்.
உள்ளாட்சியில் கைவைத்தால்
இந்த நிலையில் முந்தைய அரசு 2023ஆம் ஆண்டு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை கொண்டு வந்து, தனியார் நிறுவனங்களுக்கு நீர்நிலைகள் உள்பட தாரை வார்க்கக் கொண்டு வந்த சட்டம் போல்.. தற்போது த.வெ.க.அரசு இந்த சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது
பல்வேறு ஜனநாயக உரிமை போராட்டங்களில் பங்கு கொண்டு காவல் துறையால் போடப்பட்ட வழக்குகளில் வழக்காடு மன்றங்களில் அலைந்து திரிந்து வருகிற விவசாயிகளை காத்திட... இதுவரை நிலுவையில் உள்ள வழக்குகளை ரத்து செய்யப்படும் என தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.