ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீர் சரிவு
பென்னாகரம்,
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தநிலையில், திடீரென நீர்வரத்து சரிந்துள்ளது.
கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவைப் பொறுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதும் வழக்கம். நேற்று முன்தினம் காலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக இருந்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி இந்த நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக நீடித்தது.
நீர்வளத்துறை அதிகாரிகள்
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பரிசல் இயக்க தடை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 11-வது நாளாக நீடிக்கிறது.இதனால் ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதே நேரத்தில் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீர்வரத்து சரிவு
இந்நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 10,000 கன அடியாக இருந்து நீர் வரத்து, இன்று பிற்பகல் நிலவரப்படி 6,500 கன அடியாக சரிந்துள்ளது. இதனால், பரிசல் சவாரிக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.