பா.ஜ.க-வை விட எங்களை அதிகம் தாக்குவது ஏன்? தி.மு.க
பா.ஜ.க-வை விட எங்களை அதிகம் தாக்குவது ஏன்? தி.மு.க-வின் அணுகுமுறை குறித்து வன்னி அரசு கேள்வி
இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களும், தலித்துகளும் போராடுவதால் தான் அவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என அமைச்சர் வன்னி அரசு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
Published : August 31, 2026 at 8:05 AM IST
சென்னை: மிலாதுன் நபி விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் வன்னி அரசு, பா.ஜ.க-வை விட விடுதலை சிறுத்தைகள் கட்சியை தி.மு.க அதிகம் தாக்கி பேசுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மயிலாப்பூரியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் மிலாதுன் நபி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், “இந்த நிகழ்ச்சி ஒரு வகுப்பறையாக மாறி இருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறேன். அமைதியாக உள்ளது. இந்த சமூகத்தில் சமத்துவம் தான் மிக முக்கியமானது.
இந்து மதத்தை எதிர்த்த அம்பேத்கர்
தலித்துகள் ஒருபோதும் இந்துக்களாக வாழ்ந்ததில்லை என்று அம்பேத்கர் சொல்கிறார். ஏன் தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்களை ஒடுக்குகிறார்கள்? இந்துக்களுக்கு எதிராக போராடுவது இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகள் மட்டுமே. அதனால் தான் அவர்களை ஒடுக்குகிறார்கள்.
யாரும் யாருக்கும் அடிமை இல்லை என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார். ‘இந்து மதம் மோசமானது, எங்களை கொடுமை செய்கிறது’ என்று இந்து மதத்திலிருந்து அம்பேத்கர் வெளியேறினார். ஒரு இஸ்லாமியராக இருந்து பாருங்கள் என்று கூறினார். ஒரு நாள் தலித்தாக இருந்து பாருங்கள். இன்று தலித்துகள் ஒவ்வொரு நாளும் வேட்டையாடப்படுகிறார்கள், மேலாதிக்கத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
அரசியலமைப்புச் சட்டம்
அம்பேத்கர் அமைத்து கொடுத்த அரசியலமைப்பு சட்டம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்துகிறது. அது மதச்சார்பற்றதும் கூட. ஆனால் அந்த சட்டத்தை மாற்றி வருகிறார்கள். போராட்டம் நடத்தினால் தீவிரவாதிகள் என்கிறார்கள். சிறுபான்மை மக்களை இன்று முடுக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
அம்பேத்கர் கோட்பாடுகளுக்கு எதிராக பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் செயல்படுகிறார்கள். பா.ஜ.க தமிழ்நாட்டில் வரக்கூடாது என்று த.வெ.க-வுக்கு ஆதரவு அளித்தோம். தமிழ்நாட்டில் மதவாத அரசியலை தடுத்தது விசிக. அரசியலா? சாதி ஒழிப்பா? என்று வந்தால் எனக்கு சாதி ஒழிப்பு தான்.
சோஃபா விவகாரம்
சட்டசபையில் சோஃபா என்று சொன்னாலே பேசக்கூடாது என்று சொல்கிறார்கள். நாங்கள் சோஃபா வாங்க கூடாதா? எல்லாருக்கும் சோஃபா என்பது தான் திராவிட மாடல். நீங்க மட்டும் தான் சோஃபா வைத்துக்கொள்ள வேண்டுமா? தி.மு.க பா.ஜ.க-வை தாக்குவதை விட, வி.சி.க-வை தான் அதிகமாக தாக்குகிறார்கள். திமுக எதை நோக்கி செல்கிறது?” என கேள்வி எழுப்பினார்.
முன்னதாக பேசிய அமைச்சர் ஷாஜகான், “இந்தியாவில் பல்வேறு மதங்கள், மொழிகள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த பன்முகத்தன்மையை பாதுகாப்பதுடன், மத நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும்.
இந்தியாவில் சிறுபான்மை சமூகமாக வாழும் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இருக்கின்றன. அரசு அனைத்து சமூக மக்களுக்காகவும் செயல்பட வேண்டிய பொறுப்பில் உள்ளது. எனவே, ஆட்சியாளர்கள் தங்களது பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை என்று தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதை விட, நடைமுறை ரீதியாக சமூகத்தின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல், முஸ்லிம்களும் தங்களது மத நம்பிக்கைகளைப் பேணுவதுடன், இந்திய அரசியலமைப்பின் மீது முழுமையான நம்பிக்கையும் மரியாதையும் கொண்டிருக்க வேண்டும். அதனால் தான் ஒரு கையில் திருக்குர்ஆனையும், மறுகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் ஏந்திப் பிடிக்க வேண்டும் என்ற கருத்தை சட்டமன்றத்தில் பதிவு செய்தேன்” என்றார்.
சில மாநிலங்களில் முஸ்லிம் சமூகத்தினர் அரசியல் ரீதியாக வலுவான பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், ஐஏஎஸ், ஐபிஎஸ், வருவாய்த்துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அரசு நிர்வாகத்தின் பல்வேறு நிலைகளிலும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இடம்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், வக்ஃப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ. 100 கோடி வட்டியில்லா கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்தும் பேசினார்.