பாகிஸ்தான் அணிக்கு ரசிகர்களே இருக்க மாட்டார்கள்.. கிரிக்கெட் சீரழிகிறது.. முன்னாள் கேப்டன் கவலை
பாகிஸ்தான் அணிக்கு ரசிகர்களே இருக்க மாட்டார்கள்.. கிரிக்கெட் சீரழிகிறது.. முன்னாள் கேப்டன் கவலை
லாகூர்: உலக கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையில், அந்த அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கான் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தற்போதைய நிலை குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடு நீடித்தால், மக்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை முற்றிலும் இழந்துவிடுவார்கள் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "நாங்கள் அனைத்து வகை கிரிக்கெட்டிலும், குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் கடுமையாக திணறி வருகிறோம். இதே நிலை நீடித்தால், மக்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் மீதான ஈர்ப்பை இழந்துவிடுவார்கள் என்று நான் பயப்படுகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
"உலக கிரிக்கெட்டின் கடைசிப் பாதிக்கு நாம் தள்ளப்படலாம். இதனால் முன்னணி அணிகளுடன் இருதரப்பு தொடர்களில் விளையாடுவதற்கான வாய்ப்புகளைப் பெறுவதே நமக்கு கடினமாகிவிடும்" என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மாற்றங்களே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்று மொயின் கான் குற்றம் சாட்டியுள்ளார். கேப்டன்கள், பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களை அடிக்கடி மாற்றுவது அணியின் பலத்தை சீர்குலைப்பதாக அவர் கருதுகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் தேசிய கிரிக்கெட் அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான மாற்றங்கள், பாகிஸ்தான் கிரிக்கெட்டைப் பெரிதும் பாதித்துள்ளதுடன், வீரர்கள் கிரிக்கெட் அமைப்பின் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் சிதைத்துள்ளது என்று அவர் சாடினார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு நிலையான அணுகுமுறையைப் பின்பற்றுவதை விடுத்து, அதிகாரத்தில் இருக்கும் தனிநபர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப முடிவெடுப்பதாக முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்டரான மொயின் கான் கடுமையாக விமர்சித்தார்.
"தற்போதைய வீரர்கள் தங்கள் திறமையையும் கிரிக்கெட் நுணுக்கங்களையும் வளர்த்துக் கொள்வதற்குப் போதுமான நேரத்தைச் செலவிடுவதில்லை. ஒரு கிரிக்கெட் வீரராகச் சிறந்த இலக்குகளை அடைவதை விட, பல்வேறு லீக் போட்டிகளில் எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் என்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறார்கள்," என்று அவர் வேதனை தெரிவித்தார்.
"நாங்கள் விளையாடிய காலத்தில் லட்சங்களில் சம்பாதித்தோம். இன்று வீரர்கள் கோடிகளில் சம்பாதிக்கிறார்கள். ஆனால், வெற்றிகரமாகத் தனது நாட்டிற்காக விளையாடுவதை விட மேலானது எதுவுமில்லை என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும், தற்போது வீரர்களின் முன்னுரிமைகள் மாறிவிட்டன. பாகிஸ்தான் அணித் தொப்பியின் மதிப்பைக் குறைத்ததன் மூலம் பிசிபி மற்றும் தேர்வாளர்களும் இதற்கு ஒரு காரணமாக அமையக்கூடும்," என்று அவர் சாடினார்.
"இன்றைய பந்துவீச்சாளர்கள் அதிக நேரம் உழைக்கத் தயாராக இல்லை. வசீம் அக்ரம், வக்கார் யூனிஸ், சோயப் அக்தர் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களுடன் நான் விளையாடியுள்ளேன். எந்த வகையான ஆடுகளத்திலும் மிகத் துல்லியமாகவும் வேகமாகவும் பந்துவீச வேண்டும் என்றால், அதற்கு வலைப் பயிற்சியில் நீண்ட நேரம் கடினமாக உழைக்க வேண்டும்" என்று மொயின் கான் கூறினார்.