📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 04, 2026 07:04 AM

பாட்டுப்பாடிய தாய்லாந்து பிரதமர்; கிடார் வாசித்த சிங்கப்பூர் பிரதமர்

பாட்டுப்பாடிய தாய்லாந்து பிரதமர்; கிடார் வாசித்த சிங்கப்பூர் பிரதமர்

அரசு முறைப் பயணமாக தாய்லாந்து சென்றார் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங். விருந்து நிகழ்ச்சியில் மேடை ஏறிய லாரன்ஸ் வாங், அங்கிருந்த கிடார் இசைக்கருவியை வாசிக்க ஆரம்பித்தார். பதிலுக்கு தாய்லாந்து பிரதமர் அனுதின், மைக் பிடித்து பாட ஆரம்பித்தார். 'பீட்டில்ஸ்' குழுவினரின் 'லெட் இட் பீ' பாடலையும், பாப் டைலனின் 'புளோயிங் இன் த வின்ட்' பாடலையும் தாய்லாந்து பிரதமர் பாட, கிடார் வாசித்தார் வாங். வீடியோ, இணையத்தில் 'டிரெண்ட்' ஆனதும், இரு பாடல்களும் பொருத்தமானவை என்று பாராட்டுகின்றனர் நெட்டிசன்கள்.

'உலகுக்கு இது போன்ற நிகழ்வுகள் தேவை' என்று ஒருவரும், 'மியூசிக்கல் டிப்ளமசி' என்று இன்னொருவரும், 'இதுதான் உண்மையான தலைமைத்துவம்' என்று அடுத்தவரும் கமென்ட் செய்துள்ளனர்.

பீர் கேன்கள் லோடு ஏற்றிய லாரி திருடு போய் விட்டதாக, அமெரிக்காவை சேர்ந்த பி.பி.ஆர்., பீர் கம்பெனி வெளியிட்ட விளம்பரம், இணையத்தில் வேகமாக பரவியது. திருடு போன லாரியில், 34 ஆயிரம் பீர் கேன்கள் இருந்தன.

நொந்து போன கம்பெனி, 'திருடனே, உன்னிடம் எவ்வளவு கேன்கள் பீர் இருக்கிறது என்று உன் நண்பர்களிடம் நீ தற்பெருமை பேச விரும்புவதை, நாங்கள் குறை கூறவில்லை. அதை நீ நேர்மையான வழியில் பெற்றிருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்' என்று விளம்பரம் வெளியிட்டது.

'இன்னும் 18 நாள் 44 நிமிடம் அவகாசம் தருகிறோம். பீர் கேன்களுடன் திருடிய லாரியை அப்படியே ஒப்படைத்து விட்டால், எந்த கேள்வியும் கேட்க மாட்டோம்' என்று அந்த நிறுவனம் கூறியிருக்கிறது. இணையத்தில் வந்த விளம்பரத்தை பார்த்த நெட்டிசன்கள், கேலியும், கிண்டலுமாக கமென்ட்களை பதிவிடுகின்றனர்.

'அரசு ஊழியரான தன் சகோதரர், வீட்டை நிர்வகிப்பதற்காக ஒவ்வொரு மாதமும் மனைவிக்கு ஒரு நிர்ணயிக்கப்பட்ட தொகையை வழங்குகிறார்' என்று நெட்டிசன் ஒருவர், 'ரெட்டிட்' தளத்தில் வெளியிட்ட பதிவு, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

'சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, பிற பணிகளை செய்து வீட்டை நிர்வகிப்பது என்பது ஒரு வேலை. அதற்கு பண ரீதியான அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று என் சகோதரர் கருதுகிறார். வீட்டு வேலை, சமையல் வேலைக்கு ஆள் வைத்தால், அவர்களுக்கு சம்பளம் தருவோம். ஆனால், மனைவி அந்த வேலையை செய்தால் மட்டும் தரக்கூடாதா என்ன' என்று கேட்கிறார், அவர். இதற்கு ஆதரவாக, ஏராளமானோர் கமென்ட் செய்து வருகின்றனர்.

பி ளாஸ்டிக் குப்பையால் மாசுபட்ட ம.பி., மாநிலம் அஜ்னார் நதியை துாய்மை செய்யும் பணியில், தனி ஒருவனாக களம் இறங்கினார், 20 வயது மாணவர் பிட்டு தபாஹி. அரசு உதவியை எதிர்பாராமல், தானே ஆற்றில் இறங்கி குப்பையை அகற்றிய அவரது படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியுள்ளன.

'பலர் என்னை கேலி செய்தனர். ஆனாலும் நான் தொடர்ந்து இந்த வேலையை செய்வேன்' என்கிறார் பிட்டு. இதை பார்த்த நெட்டிசன்கள், 'இப்படி தனி நபர் நதியை துாய்மை செய்வது, அந்த நகராட்சிக்குத்தான் அவமானம்' என்றும், 'நகராட்சிக்கு செலுத்தும் வரியை இந்த மாணவருக்கு செலுத்துவது சரியாக இருக்கும்' என்றும், 'கமென்ட்' செய்து வருகின்றனர். 'ஒரு நாள் இந்த தேசம் அந்த இளைஞருக்கு மரியாதை செலுத்தும்' என்ற ஒரு நெட்டிசனின் 'கமென்ட்'டை பலர் பாராட்டியுள்ளனர்.

அ மெரிக்காவில் 15 ஆண்டாக வசிக்கும் நிதின் மல்ஹோத்ரா, பல் வலிக்கு சிகிச்சை பெற மருத்துவமனை சென்றார். 'சிகிச்சைக்கு 7.55 லட்சம் ரூபாய் செலவாகும்; காப்பீடு நிறுவனம் செலுத்தியதுபோக, கையில் இருந்து 2.37 லட்சம் ரூபாய் நீங்கள் செலுத்த வேண்டும்' என்று டாக்டர் கூறியதும் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இது பற்றி வீடியோ வெளியிட்ட நிதின், 'அமெரிக்காவில் பல் சிகிச்சை செலவுடன் ஒப்பிட்டால், இந்தியாவுக்கான விமான டிக்கெட் செலவு 1.13 லட்சம் ரூபாய் மட்டுமே, சொந்த ஊரில் 10 ஆயிரம் ரூபாய் முதல், 15 ஆயிரம் ரூபாயில் பல் சிகிச்சை செய்து விடலாம்' என்று கூறியுள்ளார். 'இப்போது நான் அமெரிக்காவில் சிகிச்சை பெற வேண்டுமா, இந்தியாவுக்கு சென்று சிகிச்சை பெறலாமா' என்று கேள்வி எழுப்பி, அவர் வெளியிட்ட வீடியோ 'டிரெண்டிங்'கில் உள்ளது.