📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 04, 2026 04:04 AM

2027ல் குறைந்த சம்பள உயர்வு: சிங்கப்பூர் முதலாளிகள் திட்டம்

2027ல் குறைந்த சம்பள உயர்வு: சிங்கப்பூர் முதலாளிகள் திட்டம்

அதிகரித்துவரும் மனிதவளச் செலவினங்கள், நீடிக்கும் வர்த்தக நிச்சயமற்ற சூழல் ஆகியவற்றின் காரணமாக நிறுவனங்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இதனால், 2026ஆம் ஆண்டைவிட 2027ஆம் ஆண்டில் ஊழியரின் சம்பள உயர்வை முடக்க அல்லது குறைந்த அளவிலான சம்பள உயர்வை வழங்கச் சிங்கப்பூரில் பெரும்பாலான முதலாளிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் நடத்திய புதிய கருத்துக்கணிப்பின்படி, ஆய்வில் கலந்துகொண்ட 320 முதலாளிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் (51 விழுக்காட்டினர்) 2027ஆம் ஆண்டில் ஊழியரின் சம்பள உயர்வை முடக்க அல்லது சம்பள உயர்வின் அளவைக் கட்டுப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இவ்வாண்டோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்த விகிதம் 48 விழுக்காடாக இருந்தது.

சம்பள உயர்வை வழங்கத் திட்டமிடும் நிறுவனங்களின் எண்ணிக்கை 2026ஆம் ஆண்டு 51 விழுக்காடாக இருந்தது. அது, அடுத்த ஆண்டில் 49 விழுக்காடாகக் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

முதலாளிகளிடையே, குறிப்பாகச் சிறிய, நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் சம்பள நிலவரம் குறித்து எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவதை இது காட்டுவதாக வியாழக்கிழமை (செப்டம்பர் 3) சம்மேளனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

குறைந்த சம்பளம் ஈட்டும் ஊழியர்களைப் பணியமர்த்தும் முதலாளிகளில் 86 விழுக்காட்டினர், 2027ஆம் ஆண்டிலும் அடிப்படைச் சம்பள உயர்வை வழங்க உறுதியாக இருப்பது ஆய்வில் தெரியவந்தது.

இருப்பினும், இவ்வாண்டின் 96 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில் இது குறைவு. மீதமுள்ள 14 விழுக்காட்டு முதலாளிகள் சம்பள உயர்வை முடக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

மனிதவளச் செலவினங்களும் தொழில்நுட்ப முதலீடும்

கருத்துக்கணிப்பில் பங்கேற்ற முதலாளிகளில் 54 விழுக்காட்டினர் 2026ஆம் ஆண்டில் தங்கள் ஊழியர் எண்ணிக்கையை உயர்த்தத் திட்டமிடவில்லை எனத் தெரிவித்தனர்.

அதே வேளையில், ஐந்தில் இரண்டு பங்கு நிறுவனங்கள் ஊழியர் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன.

மீதமுள்ள 6 விழுக்காட்டு முதலாளிகள் ஆட்குறைப்புச் செய்யத் திட்டமிட்டுள்ளனர். கடந்த ஆண்டின் 8 விழுக்காட்டைவிட இது குறைவான எண்ணிக்கையாகும்.

2025ஆம் ஆண்டைப் போலவே, பெரும்பாலான முதலாளிகள் அதிகரித்துவரும் மனிதவளச் செலவினங்களையே 2026ஆம் ஆண்டின் முதன்மைச் சவாலாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மாறிவரும் வர்த்தக, தொழில்நுட்பத் தேவைகளுக்கு ஏற்பத் தங்கள் ஊழியர்களைத் தயார்ப்படுத்தும்போது, அவர்களின் திறன்களை மேம்படுத்துவது, புதிய திறன்களைக் கற்பிப்பது ஆகியவற்றின் செலவினங்கள் அதிகரிப்பது குறித்து 30 விழுக்காட்டு நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.

அந்த விகிதம் கடந்த ஆண்டில் 23 விழுக்காடாக இருந்தது.

அதே நேரத்தில், 2027ஆம் ஆண்டில் வேலையிடங்களில் செயற்கை நுண்ணறிவை ஆராய்வது, ஏற்றுக்கொள்வது, மேம்படுத்துவது ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்க இருப்பதாக 48 விழுக்காட்டு முதலாளிகள் குறிப்பிட்டுள்ளனர். 2026ஆம் ஆண்டில் இது 39 விழுக்காடாக இருந்தது.

நிறுவனங்களின் உற்பத்தித்திறனையும் போட்டித்தன்மையையும் பலப்படுத்த, பல முதலாளிகள் ஊழியரணித் திறன்கள், வேலை மறுஉருவாக்கம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் தொடர்ந்து முதலீடு செய்துவருவது ஊக்கமளிப்பதாக சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் துணைத் தலைவர் குவா பூன் வீ கூறினார்.

போட்டித்தன்மை ஓராண்டுக்கு முன்பிருந்ததைவிடக் குறைவாக இருந்தாலும், பொருத்தமான திறனாளர்களைக் கவர்வதே முதலாளிகளின் தலையாய மனிதவள முன்னுரிமையாக நீடிக்கிறது எனக் கூட்டமைப்பு குறிப்பிட்டது.