பைல் திறப்பதாக பூச்சாண்டி காட்டி முதல்வர் மவுனம் காப்பது ஏன்? எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி
சென்னை: பைல் திறப்பதாக பூச்சாண்டிய காட்டி 72 மணி நேரம் ஆகியும் முதல்வர் மவுனம் காப்பது ஏன்? என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.சென்னை கிழக்கு மாவட்டக் கழகம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் இளைஞர் அணிச் செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
இரண்டு நாட்களுக்கு முன்பு முதலமைச்சரே சொல்கிறார், மூன்று பைல் தயாராக இருக்கின்றன, என் மேசைக்கே வந்துவிட்டன, மேசையின் மேலேயே வைத்திருக்கிறேன், அதைத் திறக்க வைத்துவிடாதீர்கள் என்று திறங்கள், யார் உங்களை நிறுத்தியது? அதாவது மிரட்டுகிறாராம். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சோபா கொடுத்தார் அல்லவா, அதுபோல பைல் என்று மறைமுகச் சொல் வைத்து முன்னாள் அமைச்சர்களை, சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்ட முயற்சிக்கிறாராம். கிட்டத்தட்ட 72 மணி நேரம் ஆகிவிட்டது. நான் கூட இந்த முதலமைச்சருக்குக் கொஞ்சமாவது சூடு, சொரணை இருக்கும் என்று நினைத்துக் கொண்டு இன்றைக்குச் சபைக்குச் சென்றுவிட்டேன். எங்கள் இல்லத்தில் ஒரு குடும்பத் திருமணம் முடித்து விட்டு 10 மணிக்கெல்லாம் சட்ட மன்றத்திற்குச் சென்றுவிட்டேன்.
இன்றைக்கு முதல்வர் இந்தக் கோப்பைப் பற்றி வாய் திறப்பார், இல்லை திறந்து பார்த்தேன், ஏதாவது சொல்வார் என்று பார்த்தால் வாயையே திறக்கவில்லை. ஏனென்றால், அவர்களுக்குத் தெரியும், தி.மு.க மீது எந்தக் குற்றச்சாட்டையும் வைக்க முடியாது. பொய்க் குற்றச்சாட்டுகளை மட்டும் தான் வைக்க முடியுமே தவிர, எதையும் நிரூபிக்க முடியாது, நம் தலைவர் மீது எந்தக் குற்றமும் சுமத்த முடியாது. பூச்சாண்டி காட்டுகிறார்கள். அதுவும் நம்மிடம்.இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், ரவிச்சந்திரன், மாவட்ட நிர்வாகிகள் ஏகப்பன், புனிதவதி, ஜி.எம்.தேவன், ஆஷாத், மாநில நிர்வாகிகள் தமிழன் பிரசன்னா, ஷேக் அப்துல்லா, வழக்கறிஞர் சந்துரு, செயற்குழு உறுப்பினர்கள் விஜயகுமார், மகேஷ்குமார், பகுதி செயலாளர்கள் ராஜசேகர், முரளி, ஐசிஎப் முரளி, வாசு, கூ.பி.ஜெயின், டி.எஸ்.பி.ராஜகோபால், நாகராஜ், சுதாகர், தமிழ்வேந்தன், சாமிக்கண்ணு, இப்ராஹிம் கனி, கலைச்செல்வி, போஸ், மாநகராட்சி நிலைக்குழு தலைவர் மருத்துவர் சாந்தகுமாரி, மண்டலக்குழு தலைவர்கள் பி.கே.மூர்த்தி, சரிதா மகேஷ்குமார், ஸ்ரீராமுலு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் `வானவில்’ விஜய், எஸ்.எம்.ஜாவித். துணை அமைப்பாளர்கள் வினோத், ஜெகதீஷ், பாலமுருகன், தனசேகர், சங்கர் நானா, ராக்கி உசைன், வட்ட செயலாளர்கள் சதீஷ்குமார், பிரபாகர், மாமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் ஜெயின், பரிமளம், மருத்துவர் பூர்ணிமா உட்பட பலர் கலந்துகொண்டனர்.