பெரிய தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது ரஷ்யா; நட்பு நாடுகளிடம் ஆதரவு கேட்கிறார் ஜெலன்ஸ்கி
கீவ்: உக்ரைன் மீது பெரிய தாக்குதல் நடத்த ரஷ்யா தயாராகி வருகிறது; நட்பு நாடுகள் ஆதரவு தருமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா பேச்சு நடத்த ஏற்பாடு செய்து வருகிறது. விரைவில் இந்த பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அல்லது அமெரிக்கா பரிந்துரைக்கும் பிற நாடுகளில் நடைபெறும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: ரஷ்யா ஒரு பெரிய தாக்குதலுக்குத் தயாராகி வருவது குறித்த புதிய தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. தயவுசெய்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உக்ரைன் படைகளும், நமது விமானப்படையும் பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளன. நிச்சயமாக, நமது தற்காப்புத் திறன்களை பலப்படுத்த நமது கூட்டாளிகளின் உதவிகள் பெரிதும் சார்ந்துள்ளது.
நமக்குத் தேவையான ஆயுதங்களை வழங்கக்கூடிய உலகின் ஒவ்வொரு நாட்டையும் இது சார்ந்துள்ளது. மிகவும் முக்கியம் நட்பு நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும். ரஷ்யாவின் தீவிர வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து உக்ரைனின் நகரங்களையும் கட்டமைப்பு வசதிகளையும் பாதுகாக்க தற்காப்பு ஆயுதங்கள் அவசரமாகத் தேவைப்படுகிறது. இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.