பிரிக்ஸ் மாநாட்டுக்கு வரும் சீன அதிபருடன் இரு தரப்பு பேச்சு; மத்திய அரசு திட்டம்
புதுடில்லி: பிரிக்ஸ் மாநாடுக்கு இடையே பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு வரும் 12 மற்றும் 13 தேதிகளில் டில்லியில் பாரத் மண்டபத்தில் நடக்கிறது. இம்மாநாட்டிற்கு 4வது முறையாக இந்தியா தலைமை ஏற்கிறது.
ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஷி ஜின்பிங், தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோஸா, ஈரான் அதிபர் மசூத் பெஜெஷ்கியான், எகிப்து அதிபர் அப்தேல் பட்டா எல் சிசி, எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது, இந்தோனேஷியா அதிபர் பிரபாவோ சுபியான்டோ, யுஏஇ சார்பில், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல்நஹ்யான், பிரேசில் வெளியுறவு அமைச்சர் மவுரோ வியிரா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இம்மாநாட்டிற்காக அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வருவதை சீனா உறுதி செய்துள்ளது. அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க செப்.,12 மற்றும் 13ம் தேதிகளின் அதிபர் ஜின்பிங் இந்தியா பயணம் மேற்கொள்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.
இம்மாநாட்டிற்கு இடையே, பிரதமர் மோடி - அதிபர் புடின் ஆகியோர் சந்தித்து பேசுவார்கள் என ரஷ்யா அறிவித்து இருந்தது.
இந்நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என தெரியவந்துள்ளது. இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகள் எல்லையலில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை, வர்த்தகம், முதலீடு உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் பேசக்கூடும்.
இரு நாட்டு உறவுகளின் வளர்ச்சிக்கு எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவுவது முக்கியம் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. உறவை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு இந்தியா உடன் சீனா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.