📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 11, 2026 12:33 AM

10 அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல்; ஜோர்டானில் போர் விமானங்கள் சேதம்: ஈரானின் பதிலடி

10 அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல்; ஜோர்டானில் போர் விமானங்கள் சேதம்: ஈரானின் பதிலடி

டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியில், 10 அமெரிக்க கப்பல்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.

மேற்காசிய நாடான ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் மோதல் முற்றியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் மீது சமீபத்தில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஏவுகணைகளை வீசி தாக்கியது.

இதற்குப் பதிலடியாக, கடந்த 8ம் தேதி அமெரிக்க ராணுவம், ஈரானுக்குச் சொந்தமான 5 கச்சா எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்தது. இதனால் ஆத்திரமடைந்த ஈரான், அன்று இரவே மேற்காசியாவில் உள்ள ஜோர்டானின் பப்ரக், அஸ்ரக் நகரங்களில் இயங்கி வரும் அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

தாக்குதலில், நவீன போர் விமானங்களில் மிகவும் புகழ்பெற்ற எப்-15 ரக 8 விமானங்கள் சேதமடைந்தததாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோன்று 'வார்ஹாக்' என்று அழைக்கப்படும் ஏ-10 ரக தாக்குதல் விமானம் ஒன்று பலத்த சேதமடைந்து, அதன் ஒரு சக்கரம், இறக்கை காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் அமெரிக்க தரப்பில் யாரும் உயிரிழக்கவில்லை என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தங்களுடைய, 5 எண்ணெய் டேங்கர் கப்பல்களை அமெரிக்கா மூழ்கடித்ததற்கு பதிலடியாக, அமெரிக்காவின், 2 போர்க் கப்பல்கள், 8 எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், தடையை மீறிச் சென்றதாக மற்ற நாடுகளைச் சேர்ந்த, 10 கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியை தாண்டி, ஓமன் வளைகுடா மற்றும் அரபிக் கடல் பகுதிகளிலும் ஈரான் தன் கட்டுப்பாட்டு மண்டலத்தை விரிவுப்படுத்தியுள்ளது. அனுமதியின்றி இந்தப் பகுதிக்குள் நுழையும் கப்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டி விற்பனையாகி வருகிறது.