பிரிக்ஸ் உச்சி மாநாடு கவனத்தை ஈர்த்த ‘நமஸ்தே தாமரை’ சின்னம்
புதுடெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் “நமஸ்தே தாமரை” சின்னம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பாரத் மண்டபத்தில் இன்று தொடங்குகிறது. மாநாட்டை ஒட்டி டெல்லி பாரத் மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் “நமஸ்தே தாமரை” சின்னம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இந்தியாவின் தேசிய சின்னமான தாமரை மலரே, பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் சின்னமாகவும் மாறியிருக்கிறது. இதன் நடுவில் “நமஸ்தே” (வணக்கம்) வடிவம் பொறிக்கப்பட்டு இருக்கிறது.
உற்சாக வரவேற்பு, மதிப்பு-மரியாதை, விருந்தோம்பல், ஒன்றிணைந்து செயல்படுவது ஆகியவற்றை பிரிக்ஸ் மாநாட்டு சின்னம் பிரதிபலிக்கிறது.
தாமரையின் ஒவ்வொரு இதழுக்கும் தனித்தனி வண்ணம் தீட்டப்பட்டு உள்ளது. இதன்படி பிரிக்ஸ் கூட்டமைப்பின் அடிப்படை உறுப்பு நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகியவற்றின் தேசிய கொடிகளின் வண்ணங்கள் சின்னத்தில் இடம்பெற்றுள்ளன.