பிரதமர் மோடி பிறந்தநாள்: உஜ்ஜைனியில் 33.2 லட்சம் தீபங்கள் ஏற்றி உலக சாதனை!
உஜ்ஜைனி: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, ம.பி., மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில் ஒரே நேரத்தில் 33.27 லட்சம் தீபங்கள் ஏற்றி பிரம்மாண்ட உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 3.55 கோடி விளக்குகள் ஏற்றப்பட்டு தீபத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.
பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, மத்திய பிரதேசம் முழுவதும் 'சேவா சங்கல்ப் அபியான்' மற்றும் 'ஆசீர்வாத தீபம்' என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேற்று மாலை 7 மணிக்கு சைரன் ஒலித்ததும், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மின்னல் வேகத்தில் தீபங்களை ஏற்றத் தொடங்கினர். அடுத்த 3 நிமிடங்களுக்குள் நதிக்கரை நெடுகிலும் தீபங்கள் ஒளிவெள்ளத்தில் மிளிர்ந்தன.
உஜ்ஜைனியின் ராம் காட், தத்தா அகாரா, கேதாரேஸ்வர் காட், சுன்ஹரி காட், பூகி மாதா காட் மற்றும் மகாகால் மகாலோக் உள்ளிட்ட பல்வேறு படித்துறைகளிலும் லட்சக்கணக்கான அகல் விளக்குகள் ஒரே நேரத்தில் ஏற்றப்பட்டு கண் கொள்ளாக் காட்சியாக காட்சியளித்தது. தொடர்ந்து ஷிப்ரா நதிக்கு மகா ஆரத்தியும் எடுக்கப்பட்டது.
உஜ்ஜைனியில் உள்ள கார்த்திக் மேளா திடலில், எரியும் அகல் விளக்குகளை அழகாக அடுக்கி பிரதமர் நரேந்திர மோடியின் பிரம்மாண்ட உருவப்படத்தை தன்னார்வலர்கள் வடிவமைத்து அசத்தினர்.
ராம் காட் பகுதியில் நடைபெற்ற பிரதான நிகழ்வில், மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், பா.ஜ., தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு விளக்குகளை ஏற்றி தொடங்கி வைத்தனர்.
மாநிலம் முழுவதும் உள்ள 845 முக்கிய இடங்களில் மக்கள் தன்னெழுச்சியாகப் பங்கேற்று, ஒரே நாளில் மொத்தம் 3.55 கோடி தீபங்களை ஏற்றி பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவித்தனர்.
ஒரே இடத்தில் 33.27 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டதன் மூலம் அயோத்தியின் முந்தைய சாதனையை முறியடித்து உஜ்ஜைனி புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.