📅 Monday, 24 August 2026 IST | ஆவணி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 24, 2026 01:04 AM

பிரதமரின் தேசிய தினப் பேரணி உரையில் இடம்பெற்ற துப்புரவு நிறுவன உரிமையாளர்

பிரதமரின் தேசிய தினப் பேரணி உரையில் இடம்பெற்ற துப்புரவு நிறுவன உரிமையாளர்

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) பிரதமர் லாரன்ஸ் வோங் ஆற்றிய தேசிய தினப் பேரணி உரையில் சிங்கப்பூர் உணர்வைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்ட மூவரில் திரு ஷேய்க் நிஃபேல் நஸீமுதினும் ஒருவர்.

17 வயதில் தமது கல்விப் பயணத்தை முடித்துக்கொள்ள முடிவு செய்த ஷேய்க்கிடம் அவரது தந்தை, கல்வியைத் தொடரவில்லையெனில் வேலைக்குச் செல்ல வேண்டும் என கட்டாயப்படுத்தினார் என்று பிரதமர் கூறினார்.

அதனால், சாக்கடைகளையும் உயவு (கிரீஸ்) வடிகட்டிக் கருவிகளையும் சுத்தம் செய்யும் பணியில் அவர் ஈடுபட்டார். வேலை அசுத்தமாகவும் கடினமாகவும் இருந்தபோதிலும், அதைத் தன்னால் முடிந்தவரை சிறப்பாகச் செய்ய வேண்டுமென அவர் முடிவெடுத்தார்.

அன்று அவரது நாட்சம்பளம் 25 வெள்ளியாக இருந்தது. இருப்பினும், அவர் மனம்தளராமல் கடுமையாக உழைத்தார்.

வேலையை முறையாகக் கற்றுக்கொண்டு அவர் பணிபுரிந்துவந்த நிறுவனத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்றார். அவரது 26 வயதில் ஷேய்க் சொந்தமாக நிறுவனம் தொடங்க முடிவு செய்தார்.

அவரிடமிருந்த திறமையைக் கண்டறிந்த ஒரு தொழில்முனைவர் ஷேய்க்கின் நிறுவனத்தில் முதலீடு செய்தார். வாய்ப்பை நழுவவிடாத ஷேய்க் இன்று “ஜெட்டர்ஸ் இன்க்ஸ்” என்ற பல மில்லியன் வெள்ளி மதிப்புள்ள துப்பரவு நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார்.

ஷேய்க் தாம் எங்கு தொடங்கினோம் என்பதை மறவாமல் இன்றும் பலரிடம் தாம் சாக்கடைகளைத் துப்பரவு செய்பவர் என்பதைப் பெருமையாகக் கூறுகிறார் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ஷேய்க்கின் விடாமுயற்சியைப் பாராட்டிய பிரதமர், அவர் தொடர்ந்து பல உயரங்களை எட்ட வாழ்த்தினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“பிரதமர் எனது கதையைப் பகிர்ந்துகொண்டது ஒரு கனவுபோல உள்ளது. கல்வியை நிறைவு செய்யாமல் சாக்கடைகளைச் சுத்தம் செய்யச் சென்றதைப் பலரும் ஏளனமாகப் பார்த்திருக்கக்கூடும். ஆனால், என் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது நெகிழ்ச்சியளிக்கிறது.

“பல்கலைக்கழகத்திற்குச் செல்லவில்லையெனினும் வாழ்க்கை என்ற பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி அடைந்தது போல் தோன்றுகிறது,” என்று கூறினார் ஷேய்க்.

அனைவரும் நாம் எங்கிருந்து பயணத்தைத் தொடங்கினோம் என்பதை மறவாமல் இருப்பது வாழ்க்கையில் முன்னேற அவசியம் என்று ஷேய்க் சொன்னார்.

“நமது வாழக்கை பயணத்தை எண்ணி எதற்காக வெட்கப்பட வேண்டும்? அதை மனதார ஏற்று வாழ்வில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முயல்வதே சாமர்த்தியம்,” என்றார் அவர்.

இன்று பாரம்பரிய கல்விமுறைகளில் சிறந்து விளங்க முடியாமல் அவதியுறும் மாணவர்களைத் தங்கள் திறமைகளைக் கண்டறிய அவர் ஊக்குவித்தார்.

“பல நேரங்களில் சாக்குபோக்குகள் கூறுவது மிகவும் எளிது. நானும் அவ்வாறு பலமுறை செய்துள்ளேன். ஆனால், வாழ்க்கையில் வெற்றியடைய கடின உழைப்பு மிகவும் முக்கியம் என்பதை அறிந்தவுடன் என் வாழ்வு மேம்பட்டது,” என்றார் அவர்.

நம் வாழ்க்கைப் பயணத்தில் நமக்கு நாமே பக்கபலமாகவும் ஆதரவாகவும் இருப்பது அவசியமென ஷேய்க் கருதுகிறார்.