பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்கும் விநியோக ஊழிளர்களுக்கும் என்95 முகக்கவசங்கள்
சிங்கப்பூரில் நிலவிவரும் புகைமூட்டச் சூழலுக்கு மத்தியில், பொதுப் போக்குவரத்து ஊழியர்களான பேருந்து, ரயில் சேவை ஊழியர்களுக்கும் விநியோக ஊழியர்களுக்கும் ஆதரவளிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவர்களுக்கு என்95 முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
திங்கட்கிழமை (அக்டோபர் 12) முதல், தேசியப் போக்குவரத்து ஊழியர் தொழிற்சங்கம் தனது 30 பேருந்து நிலையங்கள், முனையங்கள் ஆகியவற்றில் உள்ள உணவகங்களை விநியோக ஊழியர்கள் தங்களது குடிநீர் போத்தல்களில் நீரை நிரப்பிக்கொள்ளவும் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளவும் திறந்துவிட்டுள்ளதாகத் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் உதவித் தலைமைச் செயலாளர் யோ வான் லிங் தெரிவித்தார்.
அதே நாளில் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த நடவடிக்கைகளை அறிவித்த திருவாட்டி யோ, தேசிய விநியோக ஊழியர்கள் சங்கத்தின் உறுப்பினர்களாக இருக்கும் விநியோக ஊழியர்கள் இந்த உணவகங்களில் தங்களது இலவச என்95 முகக்கவசங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்.
விநியோக ஊழியர்களுக்கான முகக்கவச விநியோகத் திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில், 2,500க்கும் மேற்பட்ட என்95 முகக்கவசங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக ‘ஃபுட்பாண்டா’ நிறுவனம் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 12) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது, ‘ஃபுட்பாண்டா’ நிறுவன விநியோக ஊழியர்களுக்காக ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வழக்கமான காற்றுத் தர ஆலோசனைகள், ஊழியர்கள் தங்களது வேலை நேரங்களை மாற்றியமைத்துக் கொள்ளும் நீக்குப்போக்குத் தன்மை, தகுந்த ஊக்கத்தொகைகளை இழக்காமல் குறுகிய இடைவேளைகளை எடுக்க அனுமதிக்கும் செயலி வசதி போன்ற புகைமூட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக அமைவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முகக்கவச விநியோகத் திட்டத்துக்கு ‘கிராப்’ நிறுவனமும் ஆதரவு அளித்துள்ளது.
தேசிய விநியோக ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள தனிப்பட்ட ஃபேஸ்புக் பதிவில், சங்கத்தின் உறுப்பினர்கள் அங் மோ கியோ, ஜூரோங் ஈஸ்ட், பொங்கோல், உட்லண்ட்ஸ் ஆகிய பேருந்து நிலையங்கள் மற்றும் ஷென்ட்டன் வே பேருந்து முனையத்தில் உள்ள தேசியப் போக்குவரத்து ஊழியர்கள் சங்க உணவகங்களில் 90 காசு விலையில் பானங்களை வாங்கி அருந்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.