📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 12, 2026 06:04 PM

எட்டு மாதக் குழந்தை மரணம்: தொடர்ந்து துன்புறுத்தியதை ஒப்புக்கொண்ட பெற்றோர்

எட்டு மாதக் குழந்தை மரணம்: தொடர்ந்து துன்புறுத்தியதை ஒப்புக்கொண்ட பெற்றோர்

சிங்கப்பூரில் தன் பெற்றோரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்ட எட்டு மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவத்தின் தொடர்பில் குழந்தையைத் தொடர்ந்து துன்புறுத்திய குற்றத்தைத் திங்கட்கிழமை (அக்டோபர் 12) அந்தப் பெற்றோர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

குளோயீ கான் சி சுவான், 23, நியோ ஜியா மிங், 27, இருவர் மீதும் குழந்தையைத் துன்புறுத்தியது, மரணம் விளைவித்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையானபோது இருவரும் அந்தக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்.

2023 டிசம்பரில் பிறந்த டிரெவர் நியோ யூ ஹின் எனும் அக்குழந்தை, பிறந்தது முதல் பெற்றோரால் தொடர்ந்து கடுமையாகத் துன்புறுத்தப்பட்டது தெரியவந்தது. குழந்தை அழுவதை நிறுத்த அதனைப் பலமாக உலுக்குவது, மூச்சுத் திணறச் செய்வது போன்ற செயல்களில் இருவரும் ஈடுபட்டு வந்தனர்.

2024 செப்டம்பர் 1ஆம் தேதி, குழந்தை அழுததால் ஆத்திரமடைந்த தாய், அதன் முகத்தில் கம்பளத்தை வைத்து அழுத்தினார். பின்னர் குழந்தையைக் குப்புறப் படுக்க வைத்தார். அன்றிரவு குழந்தை மூச்சின்றி இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது.

குற்றச்செயல்களைச் செய்தபோது தாய் கானுக்கு 21 வயது; தந்தை நியோவிற்கு 25 வயது. கர்ப்ப காலத்திலும் பிரசவத்திற்குப் பிறகும் கானிடம் மனநிலை சார்ந்த அறிகுறிகள் காணப்பட்டதாக அவரது தாயார் கூறியதாகத் தெரிகிறது.

வேலை, நிதி நெருக்கடி போன்றவற்றால் சிரமப்பட்ட அவர், மகன் அழுவதை நிறுத்த இயலாத வேளைகளில் எரிச்சலுற்றதாகக் கூறப்படுகிறது. அத்துடன், கணவன் நியோவும் அவரைத் துன்புறுத்தியதால் மனஅழுத்தத்துக்கு ஆளாகியிருக்கக்கூடும் என்றபோதும் தனது செயல்களின் விளைவுகளைப் புரிந்துகொள்ளாத அளவிற்கு அவருக்குப் பாதிப்பு இருந்திருக்காது என்று கருதப்படுகிறது.

வழக்கை விசாரித்த அரசாங்க வழக்கறிஞர்கள், தாய்க்கு 14 முதல் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் தந்தைக்கு 15 முதல் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கக் கோரினர்.

கான், நியோ இருவருக்கும் அக்டோபர் 21ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.