பொய்ப்புகாரில் என் மீது வழக்கு
பொய்ப்புகாரில் என் மீது வழக்கு - தன் மீதான பாலியல் புகார் குறித்து தொழிலதிபர் பி.ஆர். சுந்தர் விளக்கம்
பி.ஆர். சுந்தரின் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்வதாகவும், அனைத்தையும் நீதிமன்றம் மூலமே தான் நிரூபிக்க போவதாகவும் காவல் கண்காணிப்பாளர் அன்புச்செழியன் தெரிவித்துள்ளார்.
Published : August 6, 2026 at 1:37 PM IST
சென்னை: பிரபல தொழிலதிபர் பி.ஆர். சுந்தர் மீது அளிக்கப்பட்ட பாலியல் புகார் குறித்து போலீசார் விசாரணை செய்துவரும் நிலையில் உள்நோக்கத்துடன் அளிக்கப்பட்ட பொய் புகாரில் தன்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் தொழிலதிபர் பி.ஆர் சுந்தர் மீது தனியார் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த புகாரின் பேரில் சென்னை ஐஸ் ஹவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அந்த பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த புகாரிலுள்ள தகவலின்படி, வேலை தொடர்பாக பி.ஆர் சுந்தரை அணுகியபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பழக்கத்தின் அடிப்படையில் பி.ஆர் சுந்தர் அவரை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். செய்தியாளர் அங்கு சென்றபோது அவரிடம் அநாகரிகமாக நடந்துள்ளார். இதுகுறித்து பி.ஆர் சுந்தரின் மனைவியிடம் தெரிவித்தபோதும் அவர் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.
இதன் தொடர்ச்சியாக கடந்த ஜூன் 29ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறி பி.ஆர். சுந்தர் மீண்டும் அவரை தனது அலுவலகத்துக்கு வரவழைத்துள்ளார். அவர் அங்கு சென்றபோது ஒரு அறைக்குள் அவரை சுமார் 3 மணி நேரம் அடைத்து வைத்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், ஐஸ் ஹவுஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பி.ஆர் சுந்தர் மீது பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை மற்றும் குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது புகாரில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பாக பி.ஆர் சுந்தர் மற்றும் பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.ஆர். சுந்தர் தரப்பு விளக்கம்
இந்நிலையில் பி.ஆர் சுந்தர் தரப்பில் இந்த சம்பவத்திற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “பி.ஆர் சுந்தர் நிர்வாக இயக்குநராக உள்ள மான்சன் கன்சல்டன்சி நிறுவனத்துக்குச் சொந்தமான குடியிருப்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கிறது. இந்த குடியிருப்பில் தமிழ்நாடு காவல்துறையில் தொழில்நுட்பப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் அன்புச்செழியன் வசித்து வருகிறார். மேலும் அவர் அந்த வீட்டில் அனுமதியின்றி தொடர்ந்து வசித்து வருகிறார்.
பலமுறை கேட்டுக்கொண்ட போதிலும் வீட்டை காலி செய்து ஒப்படைக்கவில்லை. இதுதொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம். புகாரின் அடிப்படையில் அன்புச்செழியன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் உறுதியளித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதற்கு மாறாக, தற்போது என்னை குறிவைத்து தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சொத்து தொடர்பான பிரச்சினையின்போது அன்புச்செழியன் எனது வீட்டுக்கு வந்து என் மனைவியை மிரட்டினார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை ஒன்றில் அன்புச்செழியன் குற்றம்சாட்டப்பட்டவராக குறிப்பிடப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கம் பகுதியில் அவர் வசித்துவரும் சொத்து தொடர்பாக இரு தரப்பிலும் ஏற்கனவே சட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எங்களுக்குச் சொந்தமான குடியிருப்பை மீட்டுப் பெறுவதுடன் அதுதொடர்பான உரிமை மற்றும் பிற நிவாரணங்களை கோரி உரிய நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர மான்சன் கன்சல்டன்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சட்டரீதியாக நீதிமன்றத்தை நாட முடிவு செய்ததையறிந்த அன்புச்செழியன், தன்னை பழிவாங்கும் நோக்கில் பொய்யான மற்றும் உள்நோக்கத்துடன், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஒருவர் மூலம் தனக்கு எதிராக புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், தனது நற்பெயரையும் சமூகத்திலுள்ள மதிப்பையும் பாதிக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அதில் பி.ஆர் சுந்தர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்றும், தன்னை மிரட்டுவதற்கும், சொத்து தொடர்பாக தான் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளைத் தடுப்பதற்குமே இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது எனவும், சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் முழு நம்பிக்கை இருப்பதாகவும், உரிய சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
நான் கட்சியை சேர்ந்தவன் இல்லை
இவ்விவகாரம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பி.ஆர் சுந்தர், “நான் திமுகவை ஆதரிப்பதால் இந்த பிரச்சினை வரவில்லை. எனது சொத்தை கைப்பற்ற முயற்சிக்கும் ஒரு காவல்துறை அதிகாரியால் தான் இந்த பிரச்சினை உருவெடுத்துள்ளது. இதில் அரசியல் காரணம் எதுவுமில்லை.
நான் திமுக ஆதரவாளர் இல்லை. தமிழர்களுக்கு யார் நல்லது செய்தாலும் அவர்களை ஆதரிப்பேன். சீமான், மு.க ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளேன். அதிமுக ஆட்சி காலத்தில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளேன். தற்போது முதலமைச்சர் விஜயை சந்திக்க முயற்சி செய்து வருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு காவல் கணிகாணிப்பாளர் அன்புச்செழியனை தொடர்புகொண்டு கேட்டபோது, “இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறேன். அனைத்தையும் நீதிமன்றம் மூலமே நான் நிரூபிப்பேன். நீதிமன்றத்தை நம்புகிறேன்” என்று பதிலளித்தார்.