பாலியல் புகாரில் பங்குச்சந்தை வர்த்தகர் பிஆர் சுந்தர் கைது
சென்னை: பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் அளித்த பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் புகாரில் திமுக ஆதரவாளரும், பங்குச்சந்தை வர்த்தகருமான பிஆர் சுந்தரை சென்னை போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, பிஆர் சுந்தர் மீது பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் சென்னை போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில், பிஆர் சுந்தர் தனக்கு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், தன்னை சட்டவிரோதமாக அடைத்து வைத்து மிரட்டினார் எனத் தெரிவித்து இருந்தார்.
இதன் பேரில் பாலியல் துன்புறுத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மிரட்டல் ஆகிய பிரிவுகளில், பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து பிஆர் சுந்தர் தலைமறைவானார்.
அதே நேரத்தில் தன் மீது சுமத்தப்பட்டு இருந்த பாலியல் குற்றச்சாட்டை மறுத்து எக்ஸ் வலைதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், தமிழக போலீசில் தொழில்நுட்ப சேவைகள் பிரிவில் எஸ்பி ஆக பணியாற்றும் அன்புச்செழியன் மீது குற்றம்சாட்டி இருந்தார்.இந்நிலையில், பெங்களூருவில் மறைந்திருந்த பிஆர் சுந்தரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.