📅 Saturday, 26 September 2026 IST | புரட்டாசி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 25, 2026 11:03 PM

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்? அன்புமணி ராமதாசிடம் முறையிட்ட மீனவ கிராம சபையினர்

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்? அன்புமணி ராமதாசிடம் முறையிட்ட மீனவ கிராம சபையினர்

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்? அன்புமணி ராமதாசிடம் முறையிட்ட மீனவ கிராம சபையினர்

சென்னை பட்டினப்பாக்கத்தில் அமையுள்ள புதிய தலைமைச் செயலக திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மீனவர்கள் பயனடையும் வகையில் பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள 1,200 குடும்பங்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும்.

Published : September 25, 2026 at 3:29 PM IST

சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மயிலை மீனவ கிராம சபையினர், தங்களின் போராட்டத்துக்கு ஆதரவு கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை நேற்று நேரில் சந்தித்தனர்.

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் சுமார் 20 இலட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகக் கட்டட வளாகம் அமைக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், மயிலை பகுதி அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை சார்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை நேற்று (செப்டம்பர் 24) பனையூர் அலுவலகத்தில் வைத்து சந்தித்தனர். தங்களின் போராட்டத்துக்கு ஆதரவு கோரி இந்த சந்திப்பை அவர்கள் நிகழ்த்தினர்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மீனவ மக்களின் வாழ்வாதாரமும், அவர்கள் வசிக்கும் இடமும் மிகவும் முக்கியமானது. ஆகையால், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அரசாணையை அரசு திரும்பப் பெற வேண்டும். ​அந்த பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படும்.

​எனவே ​பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டப்பட மாட்டாது என அரசு அறிவிக்க வேண்டும். இதுதொடர்பான அரசாணையையும் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். தவறினால், மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவார்கள்.

சுமார் 500 முதல் 1,000 ஏக்கர் பரப்பளவில் தனியாக ஒரு 'நிர்வாக நகரம்' உருவாக்கப்பட வேண்டும். அதில் சட்டமன்றம், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் இல்லங்கள், பள்ளிக்கூடங்கள், அகலமான சாலைகள், வணிக வளாகங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமையுமாறு திட்டமிடலாம். ஆகவே, மீனவர்கள் நடத்தும் போராட்டத்திற்குப் பாட்டாளி மக்கள் கட்சி முழு ஆதரவை அளிக்கிறது" என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய மீனவ கிராமத்தைச் சேர்ந்த விஜயன், "சென்னை பட்டினப்பாக்கத்தில் 1,200 மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. பட்டினப்பாக்கத்தில் சட்டமன்றம் அமைப்பது தொடர்பான அரசாணையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடம் கொடுத்து, எங்களுடைய சூழ்நிலையை எடுத்து கூறியுள்ளோம்.

1957 இல் இருந்து சுமார் 70 ஆண்டுகளாக நாங்கள் இங்கு வசித்து வருகிறோம். மேலும் இங்கு வசித்து வரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 825 சதுர அடியில் வீடு கட்டி தருவதாக ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இதுதவிர, பட்டினப்பாக்கத்தில் உள்ள சீனிவாசபுரம் 2050 ஆம் ஆண்டில் பகுதி வாரியாகவும், 2100 ஆம் ஆண்டுக்குள் அந்த இடம் கடலின் உள்ளே முழுவதுமாக மூழ்கிவிடும் என்றும் 'கிளைமேட் ஆக்சன் இந்தியா' எனும் அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பான ஆவணங்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடம் கொடுத்துள்ளோம். இத்துடன், எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவரிடம் கேட்டுள்ளோம். மேலும், வரும் 29ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மீனவ பஞ்சாயத்து சார்பிலும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளோம்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் அமையுள்ள புதிய தலைமைச் செயலகத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மீனவர்கள் பயனடையும் வகையில் பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள 1,200 குடும்பங்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும். இதுகுறித்து சௌமியா அன்புமணி சட்டமன்றத்தில் பேச வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்" என்றார்.

அப்போது தமிழ்நாடு அரசு சட்டமன்ற அமைப்பதற்கான அரசாணையை ரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி கொண்டிருப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "இப்படி ஒரு முடிவெடுக்கப்பட்டால் அதை வரவேற்கிறோம்" என தெரிவித்தார்.