📅 Sunday, 23 August 2026 IST | ஆவணி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 23, 2026 06:00 PM

புதிய சமூகத் தலைவர்கள்: பிரதமர் லாரன்ஸ் வோங்

புதிய சமூகத் தலைவர்கள்: பிரதமர் லாரன்ஸ் வோங்

தேசிய தினப் பேரணி உரையில், முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சராக ஸாக்கி முகம்மது பொறுப்பேற்றுள்ளதைப் பிரதமர் லாரன்ஸ் வோங் சுட்டிக்காட்டினார்.

இளைய அரசியல் தலைவர்களான ரஹாயு மஹ்ஸாம், ஸுல்கர்னைன் அப்துல் ரஹீம், டாக்டர் சையது ஹாரூன் ஆகியோர் அணியை வலுப்படுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், பொருளியல் மீள்திறன் குழு போன்ற பல முனைப்புகளை இக்குழு முன்னெடுப்பதாகத் தெரிவித்தார்.

மலாய்/முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சி

டாக்டர் வான் ரிசால், சக்தியாண்டி சுபாத் ஆகிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைமையிலான இந்தப் பொருளியல் மீள்திறன் குழு, சமூகத்தின் பல சிந்தனைமிக்க ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு புதிய முனைப்புகளை முன்னெடுத்துச் செல்கிறது.

மலாய்/முஸ்லிம் இளையர்கள் புதியதாக வளர்ந்துவரும் துறைகளில் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளவும், அறிவாற்றலைப் பெருக்கிக்கொள்ளவும், புதிய வாய்ப்புகளைக் கைப்பற்றவும் ஆதரவளிப்பதே இக்குழுவின் முதன்மை நோக்கமாகும்.

இது, திரு ஸாக்கி முகம்மது அவரது குழுவினரும் மேற்கொண்டுவரும் பல முனைப்புகளுள் ஒன்று என்றும் அவர்கள் தகுந்த நேரத்தில் பிற முனைப்புகளையும் அறிவிப்பார்கள் என்றும் உரையில் பிரதமர் தெரிவித்தார்.

ஒவ்வொரு மலாய்/முஸ்லிம் சிங்கப்பூரரும் தங்களின் முழு ஆற்றலை உணர்ந்து செயல்பட, அவர்களுக்கு மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். மலாய்/முஸ்லிம் சமுதாயம் அடையும் வெற்றி, ஒட்டுமொத்த சிங்கப்பூரின் வெற்றியாகவே அமையும்.

அனைவரும் இணைந்து, மேலும் அதிக தன்னம்பிக்கை கொண்ட மலாய்/முஸ்லிம் சமுதாயத்தையும், பலமான, ஒற்றுமையான, மேலும் வெற்றிபெறும் சிங்கப்பூரையும் உருவாக்குவோம் என்று கூறி மலாய் உரையை முடித்தார் பிரதமர் லாரன்ஸ் வோங்.