📅 Thursday, 20 August 2026 IST | ஆவணி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 20, 2026 10:04 PM

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதி

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதி

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கன்னட மொழி பேசும் குடும்பத்தில் டிசம்பர் 12, 1931-ஆம் ஆண்டு பிறந்த சௌகார் ஜானகி தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடா உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுதவிர 300-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.

திரையுலக பயணம்:

நடிகை சௌகார் ஜானகி 1959-ஆம் ஆண்டு வெளியான கன்னடா மொழியில் முதல் பான் இந்தியா திரைப்படமான மகிஷாசுர மர்தினியில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சௌகார் ஜானகி டாக்டர் ராஜ்குமாருடன் நடித்தார். அந்த வகையில், சௌகார் ஜானகி புகழ்பெற்ற பான் இந்தியா நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்ட ஷவுகாரு என்ற திரைப்படத்தில் தான் நடிகை சௌகார் ஜானகி முதன் முதலில் நடித்தார். இந்தப் படத்தை இயக்குநர் எல்.வி. பிரசாத் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தான் இவருக்கு சௌகார் என்ற புனை பெயர் வந்தது. இவர் 1952-ஆம் ஆண்டு வெளியான வளையாபதி என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

வென்ற விருதுகள்:

இதைத் தொடர்ந்து இவர் எண்ணற்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் இவர் நடித்த திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதோடு, இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுக்கொடுத்தது.

கலைத்துறையில் சௌகார் ஜானகி பங்களிப்பை பாராட்டும் வகையில் இவருக்கு நந்தி விருதுகள், கலைமாமணி மற்றும் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவரது சகோதரியான கிருஷ்ண குமாரியும் புகழ்பெற்ற நடிகை ஆவார்.