பழநி மடம் நில மோசடி குறித்து சிபிஐ விசாரணை கோரி வழக்கு: ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை
மதுரை: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ.,விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுவை ஐகோர்ட் மதுரைக் கிளை ஆக.,24ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
பழநி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டவிவகாரத்தில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இன்னும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பழநி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வேணுகோபாலு சேனாபதி தாக்கல் செய்த பொதுநல மனு: பழநி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் மோசடியாக சில தனிநபர்கள் பெயர்களில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்த தேதியில் கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஜஸ்டின் மணிகண்டன் பொறுப்பு சார்பதிவாளராக செயல்பட்டுள்ளார். போலியாக மோசடி ஆவணங்களை பதிவு செய்தது தொடர்பான 2 வழக்குகளை அவர் ஏற்கனவே எதிர்கொண்டுள்ளார்.
இச்சூழலில் அவர் பொறுப்பு சார்பதிவாளராக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் நம்பிக்கை இல்லை. வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும். விசாரணையை மேற்பார்வையிட சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த வழக்கை கடந்த மாதம் நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இன்று( ஆக.,12) மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஆகஸ்ட்24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.