“ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை”
தென்காசி: “நீதிக்கட்சியும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஆங்கிலேயர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள். ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழக முதல்வராக விஜய் தொடர வேண்டும்” என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த் எம்பி உள்ளிட்டோர் தென்காசி மாவட்டம், நெற்கட்டும்செவலில் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் மாணிக்கம் தாகூர் கூறியது: “சுதந்திர போராட்டத்தில் ஒரு செங்கல்லைக்கூட எடுத்து வைக்காத பல கட்சிகள் சுதந்திர போராட்ட வீரர்களை தங்களுடைய சொத்துகளாக மாற்ற முயற்சி செய்வதை பார்ப்பது வேடிக்கையாக உள்ளது.
நீதிக்கட்சியும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஆங்கிலேயர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள். நாடாளுமன்றத்தில் பூலித்தேவனுக்கு சிலை வைக்க கோரிக்கை வைப்போம்.
தமிழக சட்டப்பேரவை தலைவர் நடுநிலையோடு செயல்படுவது பாராட்டுக்குரியது. டெல்லியில் அந்த நடுநிலை இல்லை. சட்டப்பேரவையில் ரீல்ஸ்களுக்காக சில விஷயங்கள் நடைபெறுகிறது. அது காலப்போக்கில் சரியாகிவிடும். ரீல்ஸை கேவலமாக நினைக்கக் கூடாது.
ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழக முதல்வராக விஜய் தொடர வேண்டும். ஊழலற்ற ஆட்சியை அவர் தொடர்ந்து வழங்க காங்கிரஸ் துணை நிற்கும். விஜய், ராகுல் காந்திக்கு இடையேயான உறவு சகோதரத்துவத்துடன் பலமாக உள்ளது.
சர்வே என்று சொல்லி விவாதம் செய்யும் நரி வேலைகள் செய்பவர்களிடம் சிக்காமல் இருக்க வேண்டும். நாங்கள் பாஜகவுக்கு எப்போதும் எதிரானவர்கள். நம்பி வந்தவர்களுக்காக உயிரையும் கொடுப்பவர்கள் காங்கிரஸ் கட்சிக்காரர்கள்” என்றார்.