”ரீல்ஸ்காக தான் சட்டமன்றம் நடத்தப்படுகிறது”
”ரீல்ஸ்காக தான் சட்டமன்றம் நடத்தப்படுகிறது” - எம்.பி. கனிமொழி விமர்சனம்!!
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஆளுங்கட்சியான தவெக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சியான திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் சட்டப்பேரவையில், இருதரப்புக்கு இடையேயும் வார்த்தை மோதல்கள் அதிகரித்து வருவதாக விமர்சனம் எழுந்து வருகிறது.
குறிப்பாக, திமுக வெளிநடப்பு செய்வது குறித்து தவெக விமர்சிக்கும் வேளையில், ரீல்ஸ் காக சட்டப்பேரவையில் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் பேசுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பலமுறை சட்டப்பேரவையில் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
இந்தச்சூழலில் தான், இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ள திமுக எம்.பி. கனிமொழி, சட்டமன்றமே ரீல்ஸ்காக தான் நடத்தப்படுகிறது என்ற உணர்வை தருகிறார்கள் என விமர்த்திருக்கிறார்.
செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ”தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு தொடர்ந்து குற்றங்கள் பெருகிக்கொண்டே வருகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், ஆணவக் கொலைகள், லாக்கப்மரணங்கள் என்று சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு இருக்கக்கூடிய சூழலை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அதைவிட கவலைக்குரிய ஒன்று, குற்றங்களில் பல குற்றங்களை செய்திருக்கக் கூடியவர்கள் தவெகவை சேர்ந்தவர்களாக நாம் காணக்கூடிய ஒரு சூழல் இருக்கிறது. சில நேரங்களில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல நேரங்களில் அங்கே இருக்கக்கூடிய நிர்வாகிகள் மீது குற்றம் சுமத்தப்படும் போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. சட்டம் ஒழுங்கு மிகப் பெரிய கேள்விக்குறியாக இந்த ஆட்சியில் மாறி இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
தவெகவின் அமைச்சர்கள் இன்றும் ரீல்ஸ் மோடில் இருக்கிறார்கள் என்ற மாணிக்கம் தாகூரின் பேச்சுக்கு பதிலளித்த அவர், அவர் கூட்டணியில் இருக்கக்கூடிய ஆட்சி அது. அதேசமயம், சட்டமன்றமே ரில்ஸ்க்காகத்தான் நடத்தப்படுகிறது தவெகவினர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் எனப் பேசியிருக்கிறார்.