“ரன் குவித்து வரும் மூத்த வீரரை அணியில் இருந்து நீக்குவீர்களா?”.. ரோஹித் சர்மாவுக்கு குவியும் ஆதரவு
“ரன் குவித்து வரும் மூத்த வீரரை அணியில் இருந்து நீக்குவீர்களா?”.. ரோஹித் சர்மாவுக்கு குவியும் ஆதரவு
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ந்து ரன் குவித்து வரும் மூத்த வீரர் ரோஹித் சர்மாவை அணியில் இருந்து நீக்க நினைப்பது நியாயமற்றது என்றும், அவரது எதிர்காலத்தை அவரது பேட்டிங் மட்டுமே தீர்மானிக்க வேண்டும் என்றும் மும்பை கிரிக்கெட் வட்டாரத்தில் அவருக்கு ஆதரவுக் குரல்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் நடந்த பிசிசிஐ ஆய்வுக் கூட்டத்திற்கு முன்பாக, ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் கிளப்பப்பட்டன.
இங்கிலாந்து ஒருநாள் தொடரின் போதே அவர் ஓய்வு பெற சம்மதித்ததாக தகவல்கள் வெளியானது. கார்டிப் நகரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கு பின் இந்த வதந்திகள் பரவின. ஆனால், எதையும் கண்டு கொள்ளாத ரோஹித், தனது முழுக் கவனத்தையும் அடுத்த போட்டி மீது செலுத்தினார். லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் அபார சதம் விளாசி விமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தார். முதல் 2 போட்டிகளிலுமே அவர் ஓய்வு பெறுவதற்கான எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தவில்லை.
ஒரு வீரர் தொடர்ந்து ரன் குவித்து சிறப்பாக ஆடினால், அவரை அணியில் இருந்து நீக்க எவருக்கும் உரிமை இல்லை. தொடர்ச்சியாக பல போட்டிகளில் ஒரு வீரர் சிறப்பாக செயல்பட தவறினால் மட்டுமே மாற்று வீரரை யோசிக்க வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான விதி. எனவே அடுத்து நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோஹித் தனது ஆட்டத்திறன் அடிப்படையில் இடம்பெறுவது உறுதி. இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றியுள்ள அளப்பரிய பங்களிப்பிற்கு இந்த உரிமை அவருக்கு உண்டு. அதன் பின் தனது எதிர்காலம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் ரோஹித்திடமே உள்ளது.
மற்ற வீரர்களுக்கு சலுகை காட்டிவிட்டு, ரோஹித் சர்மாவுக்கு மட்டும் ஒவ்வொரு தொடரிலும் ஓய்வு என்ற கத்தியை தொங்கவிடுவது அப்பட்டமான அநீதியாகும். சமூக வலைதள ட்ரோல்களோ அல்லது வதந்திகளை பரப்பும் ஊடகங்களோ அவரது விதியை தீர்மானிக்க முடியாது. மற்ற வீரர்களைப் போல ரோஹித்துக்கும் உரிய மரியாதையையும் சுதந்திரத்தையும் தர வேண்டும். வெளியே உள்ளவர்களின் வெட்டிப் பேச்சுகள் இன்றி, தனது பேட்டிங் மூலம் ரோஹித் தன் எதிர்காலத்தை சுயமாக தீர்மானிக்க வழிவிட வேண்டும் என்று மும்பை கிரிக்கெட் வட்டாரத்தில் அவருக்கு ஆதரவுக் குரல் கிளம்பி உள்ளது.