' ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்.!'
' ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்.!' - முதல்வர் விஜய் அறிவிப்பு!
``சென்னை ஜார்ஜ் கோட்டை 400 ஆண்டுகள் பழமையானது. 107 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த வளாகத்தில் தமிழக அரசின் பயன்பாட்டுக்காக 4 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது." - முதல்வர் விஜய்
சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வரும் நிலையில், முதல்வர் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். குறிப்பாக, 1200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகத்துக்கான அறிவிப்பையும் முதல்வர் விஜய் வெளியிட்டிருக்கிறார்.
முதல்வர் விஜய் கூறியதாவது, 'தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக்ஸ் போன்ற சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்வதை ஊக்குவிக்க சென்னையில் தமிழ்நாடு ஒலிம்பிக்ஸ் நகரம் அமைக்கப்படும்.
இருசக்கர நான்கு சக்கர வாகன உற்பத்தியில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. பல நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய விருப்பப்படுகின்றன. தமிழ்நாடு வலுவான ஆட்டோமொபைல் உற்பத்தி கட்டமைப்பை கொண்டிருக்கிறது. இங்கே உலகளாவிய மோட்டார் வாகன கார் பந்தய போட்டிக்கான தொழிற்சாலைகளை அமைப்பதற்கான தேவை உள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும்.
சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தய தடம் இங்கே அமைக்கப்படும். பார்முலா 1 போன்ற சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான கட்டமைப்பு உருவாக்கப்படும்.
சென்னை ஜார்ஜ் கோட்டை 400 ஆண்டுகள் பழமையானது. 107 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த வளாகத்தில் தமிழக அரசின் பயன்பாட்டுக்காக 4 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. மற்ற இடங்கள் அத்தனையும் பாதுகாப்புத்துறையின் கையில் இருக்கிறது. தலைமைச் செயலகம் ஜார்ஜ் கோட்டை, நாமக்கல் கவிஞர் மாளிகை என இரண்டு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதனால் 20 லட்சம் சதுர அடி பரப்பில் 1200 கோடி மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் அமைக்கப்படும்.' என்றார்.