📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 03, 2026 12:03 PM

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கு தள்ளுபடி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கு தள்ளுபடி

மு.க.ஸ்டாலின்

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றார். இந்நிலையில், தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பிடித்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அளித்த விண்ணப்பத்தை ஏற்று, கொளத்தூர் தொகுதியில், 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.

அந்த மனுவில், சரிபார்ப்புக்கு எடுக்கப்பட்ட சில வாக்குப்பதிவு இயந்திரங்கள், திடீரென கோளாறாகி நின்று விட்டன எனவும், ஆறு வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களான விவிபேட்-களை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேt-களை சரி பார்க்க உத்தரவிட வேண்டும், தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும், தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை சரிபார்க்கக் கோரி, தேர்தல் முடிவுகள் வெளியான மூன்று நாட்களில், அதாவது மே 7-ம் தேதியே விண்ணப்பித்துள்ளதாகவும், ஆனால், தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவான 45 நாட்களுக்கு பிறகே வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டதால், இந்த வழக்கை தாக்கல் செய்வதை தவிர வேறு நிவாரணம் இல்லை என வாதிட்டார்.

தேர்தல் ஆணையம் தரப்பில், மனுவில் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் விசாரானைக்கு உகந்தவை அல்ல. எம்எல்ஏ-வின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டால் இதே கோரிக்கையுடன் வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம் என்பதால், இந்த வழக்கை ஏற்கக் கூடாது என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், திமுக தலைவர் ஸ்டாலின் மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்திருந்தனர். இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வழக்கு நிலைக்கத்தக்கதல்ல எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.