📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 19, 2026 12:35 PM

ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்ந்த முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு

ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்ந்த முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு

ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்ந்த முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு

திருநங்கைகளுக்கான மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை சேவைகள் 7 மாவட்டங்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

Published : August 19, 2026 at 11:23 AM IST

சென்னை: முதலமைச்சரின் விரிவான இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான தொகை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் விஜய் இன்று (ஆகஸ்ட் 19) அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை மீதான மூன்றாவது நாள் விவாதம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரின் போது, முதலமைச்சர் விஜய், 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்றாக முதலமைச்சரின் விரிவான இலவச மருத்துவக் காப்பீட்டு தொகை ரூ. 5 லட்சத்தில் இருந்து, ரூ. 25 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.

இது குறித்து பேசிய முதலமைச்சர் விஜய், “முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக உயர்த்தப்படும். சென்னை பெரம்பூரில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 400 படுக்கை வசதிகளுடன் கூடிய உலக தர பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்படும்.

தமிழ்நாட்டில் 7 புதிய செவிலியர் கல்லூரிகள் கட்டப்படும். புதிதாக அமையும் 7 செவிலியர் கல்லூரிகளில் 620 இளநிலை செவிலியர்களுக்கான இடம் உருவாக்கப்படும்.

திருநங்கைகளுக்கான மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை சேவைகள் கூடுதலாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், தருமபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் வழங்கப்படும்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூ. 351 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உருவாக்கப்படும். மேலும், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் புற்றுநோய்களை தடுக்கவும், தரமான சிகிச்சை வழங்கவும், ’முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்’ ரூ. 673 கோடியே 44 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்படும்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ. 471 கோடியே 80 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை பிரிவு அமைக்கப்படும்.

மேலும், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ரூ. 84 கோடியில் மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்படும்.

ரேடியோ கதிர்வீச்சு சிகிச்சை, Linear Accelerator (LINAC-நேர்க் கதிர்வீச்சு), கதிர்வீச்சு சிகிச்சை, நவீன கருவிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சிகிச்சைகளுக்காக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ. 106 கோடியே 17 லட்சம் வழங்கப்படும்.

1.22 லட்சம் பெண்களுக்கு HPV DNA பரிசோதனையானது, தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ரூ. 8 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

மருத்துவர்களுக்கு பயிற்சி மற்றும் நோயாளிகளுக்கான ஊட்டச்சத்து ஆதரவு ஆகியவற்றிற்கு ரூ. 2 கோடியே 77 லட்சம் அளிக்கப்படும்” என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.