Sigma Prashanth's Review
சென்னை: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் சிக்மா திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. படமானது ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பையே பெற்றிருக்கிறது. ஜேசனின் மேக்கிங் நன்றாக இருந்தாலும்; திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்று ரசிகர்களிடையே கருத்து எழுந்திருக்கிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் பிரசாந்த் தனது திரை விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்.
அவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் படம் சிக்மா. அப்பாவின் சிபாரிசு இருந்தால் நடிகனாக அறிமுகமாவது ரொம்பவே எளிமையானது. ஜாலியாக ஹீரோவாக நடித்திருக்கலாம். ஆனால் அவர் அந்த ஈஸி ரூட்டை எடுக்காமல் சினிமா தொடர்பாக படித்து சொந்தமாக வந்திருக்கிறார். எங்கும் அவரது அப்பாவின் தயவை அவர் எதிர்பார்க்கவில்லை. அதை நினைத்து சந்தோஷம்.
படம் எப்படி இருக்கிறது?: முதல் பாதியிலேயே இதுதான் கதை என்று தெரிந்துவிடுகிறது. அவரது எழுத்தில், சிறு வயதிலிலிருந்து அவர் பார்த்த படங்களின் தாக்கம் நிறையவே தெரிகிறது. நிறைய ஹாலிவுட் படங்கள் அவர் பார்த்திருக்கிறார் என்பது தெரிகிறது. துப்பாக்கி கலாசாரம் எல்லாம் ஹாலிவுட் ஸ்டைல்தான். அதை வைத்துதான் எழுதியிருக்கிறார். மேக்கிங் படத்தின் பாசிட்டிவ். அதெல்லாம் உலகத்தரமாகவே செய்திருக்கிறார்கள். பார்த்து செய்திருக்கிறார் ஜேசன் சஞ்சய். ஐந்து படங்கள் எடுத்த ஒரு இயக்குநரின் அனுபவத்தோடு ஷாட் டிவிஷனை செய்திருக்கிறார்.
படத்தின் பிரச்னைகள்: தமனின் இசையும் பாசிட்டிவ்தான். விஜய்க்கு அவர் எப்படி இசையமைப்பாரோ அதே அளவில் கொடுத்திருக்கிறார். சந்தீப் கிஷன் ரொம்ப சின்சியராக செய்திருக்கிறார். ஃபரியா அப்துல்லாவும் ஓகே. கேரக்டர்களுக்கான அழுத்தம் இன்னும் ஆழமாக இருந்திருக்கலாம். அது பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதேபோல் அரை மணி நேரத்தில் எல்லாம் நமக்கு தெரிந்துவிடுவதும் ஒரு பிரச்னைதான். வில்லன் ஸ்ட்ராங்காக இல்லையென்றால் அங்கே ஹீரோவுக்கு வேலை இருக்காது.
இந்த வயதில் பாராட்டுக்குரிய ஒன்றுதான்: இதனை கமர்ஷியல் த்ரில்லர் என்று சொல்லலாம். அதில் எல்லாம் அடுத்தடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு இருக்க வேண்டும். இதில் முன்கூட்டியே தெரிந்துவிடுகிறது. அது பெரிய மைனஸ். திரைக்கதையில் ஜேசன் சஞ்சய் வேலை செய்ய வேண்டிய இடங்கள் நிறைய இருந்தன. இதெல்லாம்தான் பிரச்னை. ஆனால் புதுமுக இயக்குநராக இந்த வயதில் இதனை செய்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்றுதான்.
சுமாருக்கும் மேல்: ஒரு இயக்குநராக இன்னும் நிறைய கடின உழைப்பை கொடுக்க வேண்டும். அவரது மேக்கிங்கில் பிரச்னையே இல்லை. எழுத்தில்தான் பிரச்னை. அதை இன்னும் ஆழமாக்கினால்தான் சக்சஸ் ஆகும். அடுத்து அவர் ஹீரோவா இல்லை இயக்குநரா என்று தெரியவில்லை. டீசன்ட்டான அறிமுகம் இது. ஆனால் இன்னமும் எதிர்பார்த்தேன். ஒரு லெவலுக்கு மேல் காமெடியும் ஒர்க் ஆகவில்லை. சுமாருக்கும் மேல் என்று இந்தப் படத்தை சொல்லலாம்" என்றார்.