டெங்கு அரசாக பெயர் பெற்றவர்களுக்கு எங்களை குறை சொல்ல தகுதியில்லை
சென்னை: ''டெங்கு அரசு என பெயர் பெற்று, மக்களால் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டவர்களுக்கு, எங்களை குறை சொல்ல தகுதியில்லை,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: மர்ம காய்ச்சல் என மறைத்தவர்கள், 'டெங்கு அரசு' என பெயர் பெற்றவர்கள், இன்று டெங்கு குறித்து பாடம் எடுக்கின்றனர். தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து அறிக்கை என்ற பெயரில் தொடர் தோல்விச்சாமி, அவதுாறுகளை அள்ளி இறைத்துள்ளார். மக்கள் நலனுக்காக அல்ல; கரைந்து வரும் தன் அரசியல் இருப்பை தக்க வைக்கவே என்பதை, அறிக்கை காட்டுகிறது.
தற்போது, டெங்கு, உண்ணி காய்ச்சல் பாதிப்பு குறித்த புள்ளி விபரங்களை வெளிப்படையாக வெளியிட்டு வருகிறோம். ஆனால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆட்சியில், டெங்கு பாதிப்பை, 'டெங்கு' என்று சொல்லக்கூட துணிவின்றி, 'மர்ம காய்ச்சல்' என பெயர் சூட்டி, மக்கள் உயிரோடு விளையாடினார்.
அதனால் தான், 'டெங்கு அரசு' என மக்களால் அழைக்கப்பட்டது. 2017ல் டெங்குவால், 23,294 பேர் பாதிக்கப்பட்டு, 65 பேர் உயிரிழந்தனர். ஆனால், ஆரம்ப நிலையிலேயே, டெங்குவை முடக்கி விட்டோம் என கூறுவது வரலாற்று பொய்.
தற்போது, அரசு மருத்துவமனைகளில், போதிய படுக்கை வசதிகளுடன், தனி காய்ச்சல் வார்டுகள் இயங்குகின்றன. போதிய அளவில் மருந்துகள் கையிருப்பில் உள்ளன.
ரத்த வங்கிகளில் தட்டணு கையிருப்பு, தினசரி கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொது சுகாதாரத்தில் அரசியல் செய்வோருக்கு, மக்கள் பதில் சொல்வர். மக்கள் அளித்த ஆணையோடு அமைந்த அரசை, 'டம்மி' என சொல்லும் தகுதி, தேர்தலுக்கு தேர்தல் மக்களால் நிராகரிக்கப்பட்டவருக்கு இல்லை.
மக்கள் ஆணையை அவமதிப்பது, மக்களையே அவமதிப்பதாகும். உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் அரசியல் செய்தால், மீண்டும் மக்களால் நிராகரிக்கப்படுவர். இவ்வாறு அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.