டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமனம்
சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த, 12 ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் பாதிப்பு தீவிரமாக உள்ளது. குறிப்பாக, சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
மருத்துவ முகாம் தினசரி 100 பேர் என, 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இதுவரை பாதிக்கப்பட்டு உள்ளனர்; ஒன்பது பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இதனால், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் கூறியதாவது:
டெங்கு காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ்' வகை கொசுக்கள் மட்டுமின்றி, அதன் புழுக்களையும் கண்டறிந்து அழிக்கும் பணியில், 25 ஆயிரத்து 158 பணியாளர்கள் ஈடுபடுத்தப் பட்டு உள்ளனர்.
அதேபோல, கொசு ஒழிப்பு பணிகளுடன், காய்ச்சல் பாதிப்பு இருக்கும் பகுதிகளிலும், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, தடுப்பு பணி நடந்து வருகிறது. இப்பணிகளை கண்காணிக்க, பொது சுகாதாரத்துறையின் கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் ஆகியோர் ஒருங்கிணைப்பு அதிகாரி களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தடுப்பு பணி அதன்படி, 45 சுகாதார மாவட்டங்கள் அடிப்படையில், 12 ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஒரு ஒருங்கிணைப்பாளர், சராசரியாக மூன்று அல்லது நான்கு சுகாதார மாவட்டங்களில், உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவ துறையினருடன் இணைந்து, டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் ஈடுபடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.