📅 Sunday, 23 August 2026 IST | ஆவணி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 23, 2026 03:04 PM

டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்த ஷுப்மன் கில்: SL vs IND

டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்த ஷுப்மன் கில்: SL vs IND

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா 165 ரன்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று கொழும்பில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் 45 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்துள்ளது. தேவ்தத் படிக்கல் மற்றும் ஷுப்மன் கில் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர்.

3,000 ரன்கள் கடந்த ஷுப்மன் கில்

இந்த ஆட்டத்தில் இந்திய கேப்டன் ஷுப்மன் கில், 13 ரன்கள் எடுத்திருந்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்த இந்திய வீரர்களின் பட்டியலில் இணைந்தார். 77 டெஸ்ட் இன்னிங்ஸில் 3,000+ ரன்களை அவர் கடந்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 43.53 ஆகும். 11 சதங்களை பதிவு செய்துள்ளார்.

26 வயது 349 நாட்களில் 3,000 ரன்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் கடந்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களை நிறைவு செய்த இளம் இந்திய வீரர்களின் பட்டியலில் அவர் நான்காவது இடம் பிடித்துள்ளார்.

இந்த வரிசையில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். அவர் 23 வயது 228 நாட்களில் 3,000 ரன்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் நிறைவு செய்தார்.

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற பின்னர் ஷுப்மன் கில்லின் பேட்டிங் சராசரி மேம்பட்டுள்ளது. கேப்டனாக 11 டெஸ்ட் போட்டிகளில் அவரது பேட்டிங் சாராரி 74.06 என உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் பார்மெட்டிலும் அவர் 3,379 ரன்களை பதிவு செய்துள்ளார். இந்த ஆட்டத்தில் 99 பந்துகளில் அவர் அரைசதம் கடந்தார்.