📅 Monday, 19 October 2026 IST | ஐப்பசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 19, 2026 01:03 PM

த.வெ.க., கூட்டணியில் சேர விருப்பம்; காங்கிரசில் இணைய வாசன் மறுப்பு

த.வெ.க., கூட்டணியில் சேர விருப்பம்; காங்கிரசில் இணைய வாசன் மறுப்பு

காங்கிரசில் இணைய விரும்பாத த.மா.கா., தலைவர் வாசன், த.வெ.க., கூட்டணியில் சேர காய் நகர்த்துகிறார். அதற்காக முதல்வர் விஜயை சந்திக்க நேரம் கேட்டு காத்திருக்கிறார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்றதும், 'மூப்பனார் வழிவந்த பாரம்பரிய தலைவர்கள் அனைவரும் தாய் கட்சியான காங்கிரசில் இணைய வேண்டும்' என, அழைப்பு விடுத்தார். அதை வரவேற்ற த.மா.கா., தலைவர் வாசன், 'காங்கிரசுடன் இணைந்து செயல்படுவோமே தவிர, அக்கட்சியுடன் முழுமையாக சேர மாட்டோம்' என்றார். அதற்கேற்றபடி, காங்கிரசுடன் கூட்டணி சேரும் திட்டத்தை கைவிட்டு, த.வெ.க.,வுடன் நெருக்கம் காட்ட வாசன் விரும்புகிறார்.

அதனால் தான், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில், த.வெ.க.,வுக்கு த.மா.கா., ஆதரவு அளித்தது. கடந்த, 60 ஆண்டு கால ஆட்சியில் இல்லாத வகையில், த.வெ.க., அரசு துாய நிர்வாகத்தை கொடுப்பதாகவும், வாசன் பாராட்டினார். த.வெ.க., ஆட்சியின், 100 நாள் சாதனையை பட்டியலிட்டு, த.மா.கா., சார்பில் கருத்தரங்கமும் நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, வரும் நவம்பர், 5ம் தேதி, சென்னை ராயபுரத்தில், வடசென்னை தெற்கு த.மா.கா., சார்பில், வாசன் பங்கேற்கும் பட்டிமன்றம் நடக்கவுள்ளது. நவ., 28ல், த.மா.கா., 13வது ஆண்டு விழா பொதுக்கூட்டம், டிசம்பரில் கவிஞர் கண்ணதாசன் நுாற்றாண்டு விழா போன்ற நிகழ்ச்சிகளை நடத்தவும் வாசன் திட்டமிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட த.வெ.க., அமைச்சர்கள், நிர்வாகிகளை அழைக்கும்படி, தன் கட்சியினரை வாசன் அறிவுறுத்தி உள்ளார். எனவே, அவர் காங்கிரசில் இணையப்போவதில்லை என்பது உறுதியாகி உள்ளது.

மேலும், த.வெ.க,, கூட்டணியில் இடம் பெறுவதற்காக, முதல்வர் விஜயை சந்தித்து பேச முடிவு செய்துள்ளார். அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போன்றவர்களிடம், அதற்கு நேரம் கேட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, த.மா.கா., நிர்வாகிகள் கூறியதாவது: காங்கிரசில் வாசன் இணைய வேண்டும் என, மாணிக்கம் தாகூர் விரும்புகிறார். த.மா.கா., இணைந்ததாலும், அக்கட்சியினருக்கு மூன்றாண்டுகளுக்கு எந்த பதவியும், காங்கிரசில் தரப்படாது என, நிபந்தனை விதிக்கப்படுகிறது; வாசன் அதை ஏற்கவில்லை.

வாசனை காங்கிரசில் இணைக்க, மூத்த தலைவர் சோனியா பச்சைக்கொடி காட்டி விட்டார். ஆனால், ராகுல் தயக்கம் காட்டுகிறார். அதனால், சென்னை வந்த ராகுலை வாசன் சந்திக்கவில்லை. இருவரும் சந்திப்பதற்கு மாணிக்கம் தாகூரும் ஏற்பாடு செய்யவில்லை. த.வெ.க., கூட்டணியில் சேர விரும்பும் வாசன், விஜய் அழைப்புக்காக காத்திருக்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.