📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 15, 2026 06:30 PM

தாமதமாக வந்ததாக உதவியாளரின் சம்பளம் குறைப்பு; விசாரிக்கும் சேட்ஸ்

தாமதமாக வந்ததாக உதவியாளரின் சம்பளம் குறைப்பு; விசாரிக்கும் சேட்ஸ்

சாங்கி விமான நிலையத்தில் 11 விநாடிகள் தாமதமாக வந்த சக்கர நாற்காலி உதவியாளர் ஒருவரின் சம்பளம் குறைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது தொடர்பில் சேட்ஸ் நிறுவனம் கவலைத் தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தில் நிலவழிச் சேவைகளை வழங்கும் சேட்ஸ், அதுகுறித்து விசாரிப்பதாகச் சொன்னது.

லிங்டின் தளத்தில் பதிவேற்றப்பட்ட பதிவு மூலம் உதவியாளரின் சம்பளம் குறைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

அவென்டா செர்விசஸ் என்ற பங்காளி நிறுவனம் ஊழியர்களைக் கையாளும் விதம் பற்றிய பதிவு குறித்து அறிந்திருப்பதாகவும் நிறுவனத்திடம் அதைத் தெளிவுபடுத்தும்படி கேட்டிருப்பதாகவும் சேட்ஸ் பேச்சாளர் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) கூறினார்.

வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்குரிய சேவைகளை வழங்கும் ‘மெயிட் வித்தவுட் போர்டர்ஸ்’ என்ற நிறுவனத்தின உரிமையாளர் ஜூலியட் லோ லிங்டின் தளத்தில் தமது கருத்துகளைப் பதிவேற்றினார்.

சாங்கி விமான நிலையத்தில் உதவியாளர் ஒருவர், வேலைக்கு 11 விநாடிகள் தாமதமாக ஒருமுறை வந்ததால் அவரது சம்பளத்திலிருந்து $5 கழிக்கப்பட்டது என்று அதில் அவர் குறிப்பிட்டார். அந்த உதவியாளர் ஒரு மணிநேரத்துக்கு $7 சம்பாதிப்பதாக லோ கூறினார்.

அது தொடர்பில் தமது சம்பளக் கடிதத்தை அந்த உதவியாளர் காண்பித்ததையும் லோ பகிர்ந்துகொண்டார்.

லோவின் பதிவுக்கு 500க்கும் அதிகமானோர் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தியதோடு கிட்டத்தட்ட 100 கருத்துகள் பதிவாகின.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

மனிதவள அமைச்சின் இணையத்தளத்தில் வேலைக்குத் தாமதமாக வரும் ஊழியர்களிடம் அதற்கான காரணத்தை முதலாளிகள் கேட்டறியவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுந்த காரணங்களைக் கூறும் ஊழியர்கள்மேல் நியாயமற்ற முறையில் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று அமைச்சு சுட்டுகிறது.

வேலைக்கு வராத ஊழியர்களின் சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை முதலாளிகள் கழித்துக்கொள்ளலாம் என்ற அமைச்சு, அந்தத் தொகை அவர் வேலைக்கு வராத நாள்களைவிட அதிகமாக இருக்கக்கூடாது என்றது.

உதாரணமாக, வேலைக்கு அரை மணி நேரம் தாமதமாக வரும் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து அரை மணி நேரத்துக்குரிய தொகையை மட்டுமே முதலாளிகள் கழிக்க அனுமதி உண்டு.

அவென்டா செர்விசஸ் நிறுவனம் அமைச்சின் விசாரணையில் நேரடியாகப் பதில் கூறுவதாக சேட்ஸ் பேச்சாளர் சொன்னார்.