தாராபுரம் இடைத்தேர்தல்: பிரச்சார வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா பிரச்சாரம் மேற்கொள்ளும் பகுதிகளில் பொதுமக்களிடையே எதிர்ப்புகள் எழுந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள சத்தியபாமா திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அப்பகுதியில் நிலவிய சூழ்நிலையைத் தொடர்ந்து, இன்று காலை நடைபெற இருந்த பிரச்சாரத்தை அவர் ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, மூலனூர் தெற்குன்றியம் பகுதியில் உள்ள குமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நீலாங்கிளி வளர்ப்புப் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார வாகனம் சென்றுள்ளது. அப்போது, அப்பகுதி பொதுமக்கள் பிரச்சார வாகனத்தை தடுத்து நிறுத்தி, அதில் வந்த கட்சி நிர்வாகிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
குறிப்பாக, வேட்பாளர் நேரில் வராமல் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது என்றும், தங்களது கேள்விகளுக்கும், தங்களுடைய ஆதங்கங்களுக்கும் வேட்பாளர் உரிய பதில் அளித்த பின்னரே அந்தப் பகுதியில் வாக்கு சேகரிக்க வர வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், வேட்பாளர் சத்தியபாமா தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மீண்டும் பணம் பெற்றுக்கொண்டு வேறு கட்சிக்கு செல்ல மாட்டார் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியுமா என்றும் கட்சி நிர்வாகிகளிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு கட்சி நிர்வாகிகள், “தளபதிக்காக வாக்களியுங்கள்” எனக் கூறியதாக தெரிகிறது. எனினும், அதனை ஏற்காத பொதுமக்கள், வேட்பாளர் நேரில் வந்து தங்களது கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வரை அந்தப் பகுதியில் மைக் மூலமாகக்கூட பிரச்சாரம் செய்யக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பிரச்சார வாகனம் அந்தப் பகுதியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், சத்தியபாமா இன்று மாலை அதே பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படும் நிலையில், காலை நேரத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலை நடைபெற உள்ள பிரச்சாரத்தில் வேட்பாளர் நேரில் சென்று பொதுமக்களை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.