தாராபுரம் தொகுதியில் தவெக
தாராபுரம் தொகுதியில் தவெக-அதிமுகவினர் மோதல்? அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்
தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேற்று இரவு நஞ்சியம்பாளையம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
Published : September 26, 2026 at 3:59 PM IST
திருப்பூர்: தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தவெக-அதிமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து அமைச்சர் சம்பத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, அங்கு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில், இத்தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேற்று இரவு நஞ்சியம்பாளையம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அப்பகுதி பொதுமக்கள் தங்களது நீண்டகால அடிப்படை பிரச்சனைகள், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் தொடர்பாக அமைச்சரிடம் கோரிக்கைகளை வைத்தனர்.
அந்த சமயத்தில், அங்கு வந்த அதிமுக தொண்டர்களுக்கும், தவெக தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த வாக்குவாதம் முற்றி, மோதலாக மாறியதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், அங்கு சென்று இரு தரப்பினரையும் விலக்கி, தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அமைச்சர் விளக்கம்
இந்நிலையில், இன்று தாராபுரம் தொகுதியில் உள்ள தேர்தல் பணிமனையில் கட்சி நிர்வாகிகளுடன் அமைச்சர் சம்பத் குமார் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அவர் கூறுகையில், "மக்கள் பேராதரவுடன் நாங்கள் இருக்கிறோம். நேற்று எங்கள் பரப்புரை நல்ல முறையில் சென்று கொண்டிருந்தது. அப்போது வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் திடீரென வந்து பிரச்சனை செய்தனர்.
பிரச்சாரத்தை திசைதிருப்பும் வகையில் அவர்கள் செயல்பட்டனர். இதனால் அங்கு சூழ்நிலை மாறியது. இந்த சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சில தொண்டர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில்தான் இச்சம்பவத்தின் பின்னணி குறித்து தெரியவரும்" என சம்பத்குமார் விளக்கம் அளித்தார்.