திருநங்கைகள் வாழத் தகுதியற்ற சூழலை உருவாக்குவது ஒருவகை வன்முறையே
திருநங்கைகள் வாழத் தகுதியற்ற சூழலை உருவாக்குவது ஒருவகை வன்முறையே - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்
'டோரதி' திரைப்படம், விவாதிக்கப்பட வேண்டிய படம்; விவாதம் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
Published : September 28, 2026 at 4:18 PM IST
மதுரை: திருநங்கைகள் வாழ்வதற்கே தகுதியற்ற சூழலை உருவாக்குவது ஒரு வகையான வன்முறைதான் என்று திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள டோரதி படம், வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை ரசிகர்களுடன் பார்ப்பதற்காக, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், படத்தில் நடித்துள்ள ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் மதுரை கூடல்நகர் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கிற்கு வந்திருந்தனர். ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை பார்த்த பின்னர், கார்த்திக் சுப்புராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
படத்தை பார்க்காதவர்கள் விமர்சிக்கிறார்கள்
அப்போது அவர் கூறுகையில், "ஆன்லைன் விமர்சனங்கள் எங்களை பெரிதாக பாதிக்கவில்லை. திரைப்படத்தை பார்க்காத சிலர்தான் ஆன்லைனில் விமர்சனம் செய்து வருகின்றனர். அதே நேரத்தில், திரைப்படத்தைப் பார்த்தவர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். பொதுமக்களிடையே திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
1990-களில் நடக்கும் கதை
‘டோரதி’ திரைப்படத்தின் கதை 1990-களில் நடைபெறுவதாக அமைக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில வசனங்களின் அர்த்தம் தவறாகச் சித்தரிக்கப்படுகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கைகள் எந்த நிலையில் இருந்தார்கள் என்பதையும், தற்போது அவர்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி வருவதையும் பார்க்க வேண்டும்.அந்த முன்னேற்றத்தை அடைவதற்கு அவர்கள் பல ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது.
அந்தச் சூழலைக் குறிப்பிடும் வகையில்தான் திரைப்படத்தில் குறிப்பிட்ட வசனம் இடம்பெற்றுள்ளது. திரைப்படத்தை முழுமையாகப் பார்த்தவர்களுக்கு நாங்கள் கூற வந்த கருத்து புரியும். ஆனால், சிலர் திரைப்படத்தைப் பார்க்காமலேயே தேவையற்ற விவாதங்களை உருவாக்கி வருகின்றனர்.
ஆணாகப் பிறந்து, பெண்ணாக மாற விரும்பும் திருநங்கைகளை இந்தச் சமூகம் பல்வேறு வழிகளில் முடக்க நினைக்கிறது. பல்வேறு பிரச்னைகளைக் கடந்து அவர்கள் சமூகத்தில் சாதித்து வருகின்றனர். ஆனால், அவர்கள் எதிர்பார்ப்பது ஒரு சராசரி மனிதருக்குக் கிடைக்கும் இயல்பான வாழ்க்கைதான்.
திருநங்கைகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவற்றை திரைப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறோம். இதற்காக பல திருநங்கைகள் என்னிடம் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.
எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தாது
இந்தத் திரைப்படம் சிறுவர்கள் மற்றும் அடுத்த தலைமுறையினரிடம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது. மாறாக, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே திரைப்படத்தின் முக்கிய நோக்கம்.
அன்றாட வாழ்க்கையில் சாலைகளில் திருநங்கைகளைப் பார்க்கிறோம். சிலர் பிச்சை எடுக்கும் நிலைக்கும், தவறான பாதைக்கு தள்ளப்படும் நிலைக்கும் ஆளாகின்றனர். அவர்களை ஒரு மனிதராகக்கூட மதிக்காத சூழல் உள்ளது. இந்தத் திரைப்படத்தைப் பார்ப்பதன் மூலம், அவர்களைப் பார்க்கும் பார்வையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நம்பிக்கையில்தான் திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
புராண காலம் முதலே மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த குறிப்புகள் உள்ளன. வளர்ந்து வரும் காலகட்டத்திலும் பல திருநங்கைகளைப் பார்த்திருக்கிறோம். அவர்களது வாழ்க்கையில் பல்வேறு இழப்புகள் நிகழ்ந்துள்ளன. உடலளவில் ஆணாகப் பிறந்து, பெண்ணாக மாற வேண்டும் என்ற விருப்பத்துடன் வாழும் ஒருவரின் உணர்வுகளை அப்படியே திரைப்படத்தில் பிரதிபலிக்க முயன்றுள்ளோம். தங்களது உணர்வுகளை வெளியில் கூறுவது அசிங்கம் என்ற தயக்கத்தை இத்தனை ஆண்டுகளாக ஏற்படுத்தியது சமூகம்தான்.
சொந்த குடும்பத்தில் இருந்து வெளியேற்றப்படுவது, கொலை செய்யப்படுவது உள்ளிட்ட பல்வேறு அநீதிகளும் திருநங்கைகளுக்கு எதிராக நிகழ்ந்துள்ளன. திருநங்கைகள் கடவுளின் சிறப்பான படைப்பு. ஆனால், அவர்கள் வாழ்வதற்கே தகுதியற்ற சூழலை உருவாக்குவது ஒரு வகையான வன்முறைதான்.
ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்
திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை வழக்கமான முறையில் முடித்திருந்தால் அது கார்த்திக் சுப்புராஜ் திரைப்படமாக இருக்காது. ‘கல்யாண விருந்து’ பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல், ‘முத்துமணி’ பாடல் தொடங்கும்போது திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடுவதையும் பார்க்க முடிகிறது. படத்திற்கு இசை அமைத்திருப்பவர் இசைக் கடவுள் இளையராஜா. அவர் கொடுப்பதை நாம் வாங்கிக்கொள்ள வேண்டும். நாம் கேட்டு வாங்குவதற்கு ஒன்றும் இல்லை.
திரைப்படம் குறித்து யாரோ சிலர் பேசுகிறார்கள் என்பதற்காக அதைப் பற்றி தொடர்ந்து விவாதிக்கத் தேவையில்லை. பெரிய நடிகர்களிடம் இந்தக் கதையைக் கூறி, அவர்களுக்கு கதை பிடித்திருந்தால் அவர்கள் நடித்திருக்கலாம். ஆனால், இந்தக் கதைக்கு புதிய, திறமையான நடிகர்கள் தேவைப்பட்டனர். அந்த வகையில் ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
திருநங்கைகள் பற்றிய படம் வரவே கூடாது என்பது யாருடைய பிரச்னை? இந்தப் படம் விவாதிக்கப்பட வேண்டிய படம். இந்த விவாதத்தின் மூலம் சமூகத்தில் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். என்று கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்தார்.